விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: மத்திய மாநில அரசுகளுக்கு தீர்ப்பாயம் 'நோட்டீஸ்'
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: மத்திய மாநில அரசுகளுக்கு தீர்ப்பாயம் 'நோட்டீஸ்'
ADDED : செப் 19, 2025 03:16 AM
சென்னை:விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்தது குறித்து அறிக்கை செய்யுமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கீழதாயில்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில், கடந்த ஜூலையில் ஏற்பட்ட விபத்தில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக, நாளிதழ்களில் செய்தி வெளியானது.அதன் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, சென்னையில் உள்ள தென் மண்டல அமர்வுக்கு மாற்றியது. அதைத் தொடர்ந்து,
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
விருதுநகர் கீழதாயில்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், 'பெசோ' எனப்படும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனம், விபத்து நடந்த ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை உரிமையாளர் சேர்க்கப்படுகின்றனர்.இது தொடர்பாக பெசோ, பட்டாசு ஆலை உரிமையாளர், விருதுநகர் கலெக்டர், மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் நவம்பர் 6ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.