பட்டா இல்லாத சொத்துக்களை பதிவு செய்ய வக்ப் வாரியம் தடை கோர முடியாது: பதிவுத்துறை
பட்டா இல்லாத சொத்துக்களை பதிவு செய்ய வக்ப் வாரியம் தடை கோர முடியாது: பதிவுத்துறை
ADDED : மே 12, 2025 01:39 AM

சென்னை: 'வக்ப் வாரியம், தன் பெயரில் பட்டா இல்லாத சொத்துக்களை, பத்திரப்பதிவு செய்ய தடை கோர முடியாது' என, பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தில், ஒட்டு மொத்த நிலங்களுக்கும், வக்ப் வாரியம் உரிமை கோரியதால், 2022ல் அங்கு பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டது. இது, திருச்செந்துறை கிராம மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, திருச்செந்துறை கிராமத்தில், பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை பதிவுத்துறை நீக்கியது. மத்திய அரசின் வக்ப் வாரிய சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள, திருச்செந்துறை பிரச்னை முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா, பாலசமுத்திரம் கிராமத்தில், குறிப்பிட்ட சில சர்வே எண்களுக்கு உட்பட்ட, 90 ஏக்கர் நிலம் தங்களுக்கு தானமாக கொடுக்கப்பட்டது என, வக்ப் வாரியம் உரிமை கொண்டாடுகிறது.
இந்த நிலங்களை, பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கக்கோரி, வக்ப் வாரிய நிர்வாகம், பதிவுத்துறை தலைவருக்கு சமீபத்தில் கடிதம் எழுதியது.
அதற்கு பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அளித்துள்ள பதில்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பாலசமுத்திரம் கிராமத்தில், வக்ப் வாரியம் கோரிக்கை விடுத்துள்ள நிலங்கள் மீது, வக்ப் வாரியத்துக்கு உள்ள உரிமையை, முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
வருவாய் துறையின், 'தமிழ் நிலம்' தகவல் தொகுப்பில், குறிப்பிட்ட சர்வே எண்கள், வக்ப் வாரியம் பெயரில் பட்டா இருப்பதாக குறிப்பிடப்படாத நிலையில், அந்தநிலங்களின் பத்திரப்பதிவுக்கு தடை விதிக்க முடியாது.
தனியார் பெயரில் பட்டா காணப்பட்டால், அதன் உட்பிரிவு பட்டா, வக்ப் வாரியம் பெயரில் தெளிவாக இல்லாவிட்டால், பத்திரப்பதிவுக்கு தடை விதிக்க முடியாது. இத்தகவல் வக்ப் வாரிய நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் திருச்செந்துறை போன்று, பழனியில் பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில், பதிவுத்துறை வக்ப் வாரியத்திற்கு விளக்கம் அளித்துள்ளது.