வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவு: தி.மு.க., மீது அண்ணாமலை பாய்ச்சல்!
வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவு: தி.மு.க., மீது அண்ணாமலை பாய்ச்சல்!
UPDATED : ஜூன் 05, 2025 12:10 PM
ADDED : ஜூன் 05, 2025 11:08 AM

சென்னை: ''தி.மு.க., ஆட்சியில், வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுகள் நடத்தப்படுகின்றன'' என தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, மே மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பேராசிரியர்களும், ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு, போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கல்வித்துறையை கேலிக்கூத்தாக்கியிருக்கும் அவலநிலையை உருவாக்கியிருப்பதுதான் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை.
தி.மு.க., ஆட்சியில், வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தின் கடன் சுமை, ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமாகிவிட்டது. ஆனால், அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரிய பெருமக்களுக்கு, மாத ஊதியம் ஒழுங்காக வழங்க முடியவில்லை. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது?
உடனடியாக, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற நிலையில், ஆசிரிய பெருமக்களை நிறுத்த வேண்டாம் என்றும் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.