ADDED : செப் 16, 2025 06:43 AM

சென்னை : டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை துவங்கியுள்ளதால், முறை வைத்து பாசனத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு, 6.09 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதற்காக, சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து, ஜூன் 12 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இது, தஞ்சாவூர் கல்லணை வழியாக டெல்டா பாசனத்திற்கு காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகள் வழியாக திறந்து விடப்படுகிறது. குறுவை பருவ நெல் அறுவடை துவங்கியுள்ளது. வரும் நாட்களில் இது தீவிரம் அடையும்.
எ னவே, பிரதான ஆறுகள் மட்டுமின்றி சிற்றாறுகள், கால்வாய், வாய்க்கால்களில் நீர் சென்றால், அறுவடை பாதிக்கும். இதை கருத்தில் வைத்து, நீரை முறை வைத்து திறக்கும் பணியில், நீர்வளத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் அணை ஏற்கனவே முழுக் கொள்ளளவை எட்டிள்ளது. வினாடிக்கு, 18,564 கன அடி நீர்வந்து கொண்டு இருக்கிறது. அதில் இருந்து வினாடிக்கு, 17,637 கன அடி ஆற்றிலும், 800 கனஅடி நீர் கால்வாயிலும் திறக்கப்பட்டு வருகிறது.

