காணாமல் போன 'தமிழ்நாடு'; நாங்கள் காரணமல்ல: சிவசங்கர்
காணாமல் போன 'தமிழ்நாடு'; நாங்கள் காரணமல்ல: சிவசங்கர்
ADDED : ஜூன் 05, 2025 03:17 AM

அரியலுார்: ''அரசு பஸ்களில், 'தமிழ்நாடு' என்று எழுதி இருந்ததை, அ.தி.மு.க., ஆட்சியில்தான் நீக்கினர்,'' என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
அரியலுாரில் அவர் அளித்த பேட்டி:
அரசு பஸ்களில், 'தமிழ்நாடு' என்று எழுதி இருந்ததை நீக்கியதாக சர்ச்சை ஏற்படுத்துகின்றனர்.
கடந்த 2012ல், ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போது, அவர் துவக்கி வைத்த அரசு பஸ்களில், அரசு போக்குவரத்து கழகம் என்றே இருந்தது. அந்த சமயத்தில்தான், தமிழ்நாடு என்று எழுதுவதை நிறுத்தி உள்ளனர். அதன்பின், அந்த நடைமுறையே தொடர்கிறது. ஆனால், 13 ஆண்டுகளுக்கு பின், புதிய செய்தி போல், தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்ட இடங்களுக்கு, தற்போது, அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை, தமிழ்நாடு என்று பெயர் மாற்றிய அண்ணாதுரையின் பிள்ளைகள் நாங்கள். இதுகுறித்து, எங்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்.
கடந்த ஆட்சியில் செயல்படுத்திய ஒரு நடைமுறையை மாற்ற வேண்டாம் என்பதற்காக, அப்படியே விட்டு விட்டோம். அதனால், தி.மு.க., ஆட்சியில் தமிழ்நாட்டை காணாமல் செய்துவிட்டனர் என வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும். கடந்த காலங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் குறித்த தகவல்களை எடுத்து, இஷ்டத்துக்கு செய்தியாக்குகின்றனர். இதை தவறு என அரசின் தகவல் சரிபார்க்கும் குழு கண்டறிந்து சொல்லியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.