டில்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஆவேசம்
டில்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஆவேசம்
ADDED : ஜூன் 13, 2025 08:32 AM

சேலம்: ''சுயமரியாதை உள்ளவர்கள் தமிழர்கள்; டில்லியில் இருந்து தமிழகத்தை ஆள, ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்,'' என, சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சேலத்தில் நடைபெற்ற விழாவில், 1,649.18 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: அண்மையில் மதுரை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அரசியல் பேசி, இந்த ஆட்சியை குறைசொல்லி இருக்கிறார். அதனால் அரசியல் பேச வேண்டிய கட்டாயத்தில், இக்கூட்டத்தில் விளக்கம் அளிக்கிறேன்.
மத்திய அரசின் நிதியை மடை மாற்றுவதாகக் கூறி இருக்கிறார். பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் குடிநீர், வீடு கட்டுவது என எந்த திட்டமாக இருந்தாலும், அதற்கு 50 சதவீத நிதியை, மாநில அரசு ஒதுக்கிதான், அத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 'படையப்பா' படத்தில், 'மாப்பிள்ளை அவர்தான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது' என்று ஒரு காட்சி வரும்.
அதுபோல் தான் மத்திய அரசு பெயரிலான திட்டங்களுக்கும், நாங்கள் நிதி வழங்கிக்கொண்டு வருகிறோம். ஆனால், எந்த அடிப்படையில் மடைமாற்றம் செய்கிறோம் என அமித் ஷா குற்றம் சாட்டுகிறார். மதுரையில், 10 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட 'எய்ம்ஸ்' எந்த நிலையில் உள்ளது என சென்று பார்த்தீர்களா? அது மருத்துவமனையா? அல்லது விண்வெளி ஆராய்ச்சிக்கூடமா?
11 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அதை சொல்லவே மாட்டேன் என்கிறீர்கள். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.இந்த நிலையில், 2004ம் ஆண்டையும் 2025-ம் ஆண்டையும் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறீர்கள். அன்று இருந்த பட்ஜெட் என்ன? இப்போது இருக்கக்கூடிய பட்ஜெட் என்ன? அன்று தங்கம் பவுனுக்கு 5,000 ரூபாய்; இன்று, 71,000 ரூபாய்.
இன்னொரு மத்திய அமைச்சர் ஷெகாவத், கீழடி ஆய்வறிக்கையை திருத்தச் சொல்கிறார். இரும்பின் தொன்மையை கண்டறிந்த, தமிழகத்தை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை; அங்கீகரிக்கவே இல்லை. தமிழகத்தின் தொன்மை, பண்பாட்டை அழிக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது.
அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவருக்கு, அதை தட்டிக்கேட்க துணிச்சல் இல்லை. மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக செயல்படும் அவரை, மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பார்கள். பா.ஜ., கூட்டணி ஆட்சி அமையும் என்கிறார் அமித் ஷா; சுயநலத்துக்கு கட்சியை அடமானம் வைத்த பழனிசாமி மவுனமாக இருக்கிறார். சுயமரியாதை உள்ளவர்கள் தமிழர்கள். உறுதியோடு சொல்கிறேன்.
டில்லியில் இருந்து தமிழகத்தை ஆள, ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நெருக்கடிகளை மீறி நெருப்பாற்றில் நீந்தி தமிழகத்தை உயர்த்தி வரும் திராவிட மாடல் அரசுக்கு, 2026லும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். இவ்வாறு பேசினார்.