களையிழந்த வேளாண் வணிக திருவிழா எதிர்பார்த்த கூட்டமில்லாததால் ஏமாற்றம்
களையிழந்த வேளாண் வணிக திருவிழா எதிர்பார்த்த கூட்டமில்லாததால் ஏமாற்றம்
ADDED : செப் 29, 2025 01:57 AM
சென்னை:கரூர் உயிர் பலி சம்பவம் மற்றும் பள்ளி விடுமுறையால், வணிக திருவிழாவிற்கு எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை.
'வேளாண் பொருட்கள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஈரோடு மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், வேளாண் வணிக திருவிழா நடத்தப்படும்' என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
170 அரங்குகள்
விருதுநகரில் நடத்துவதற்கு பதிலாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நேற்று முன்தினம் வணிக திருவிழா துவங்கியது.
இதையொட்டி நடந்த வேளாண் கண்காட்சியில், 170க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள், தயாரிப்பு நிறுவனங்கள், வேளாண் கருவிகள், இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் என, பல்வேறு தனியார் நிறுவனங்கள் கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்றன.
இந்த நிறுவனங்களிடம் இருந்து, பெரும் தொகை கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. ஆனால், த.வெ.க., தலைவர் விஜயின் நாமக்கல் பிரசாரம், கரூர் உயிரிழப்புகள் தொடர்பான சோகம் காரணமாக, பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கி விட்டனர்.
பள்ளி காலாண்டு தேர்வு முடிந்ததால், பலரும் சொந்த ஊர்களுக்கும் சென்று விட்டனர். இதனால், எதிர்பார்த்த அளவு பொதுமக்கள் கூட்டம் வரவில்லை.
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவின்படி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட, 14 மாவட்டங்களில் இருந்து, வாகனங்களில் அழைத்து வரப்பட்ட விவசாயிகள் மட்டுமே, கண்காட்சி அரங்கில் நிரம்பியிருந்தனர்.
கருத்தரங்கம்
வணிக திருவிழாவை ஒட்டி, வேளாண் கருத்தரங்கமும் நடந்தது. இதில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த வேளாண் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இவர்களில், சிலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். இரண்டு நாட்களாக நடந்த வணிக திருவிழாவிற்கு, விவசாயிகள், அலுவலர்களை தவிர, பொதுமக்கள் அதிகம் வரவில்லை.

