ADDED : செப் 21, 2025 05:39 AM

சென்னை : தமிழகம் முழுதும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில், கடந்த வாரம் வரை, 223 முகாம்களில், 3.36 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:
கடலுார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஒரு புது மருத்துவக் கல்லுாரிக்கு செய்யப்பட வேண்டிய அளவில் பணிகளை செய்துள்ளோம்.
இதில், 194 டாக்டர்கள் மற்றும் பல் டாக்டர்கள் பணியிடம் உருவாக்கப்பட்டு, 102 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், 29 பல் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதை கருத்தில் கொள்ளாமல், இந்த மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பயன்பாட்டில் இல்லை என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறுவது அறியாமையின் உச்சம்.
பொதுவாக, ஒரு மருத்துவர் மருத்துவமனையை திறப்பவராக இருக்க வேண்டும்; பூட்டு போடுபவராக இருக்கக் கூடாது.
எங்கள் இலக்கு மருத்துவமனையை திறம்பட நடத்துவது மட்டுமே; பூட்டு போடுவதற்கு அல்ல. இந்த ஆண்டு, பருவ மழை கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.