ADDED : ஜன 10, 2024 11:21 PM
சென்னை:பணி பதிவேட்டில் குளறுபடிகள் இருப்பதால், பொங்கல் முன்பணம் கிடைக்காமல், போலீசார் ஏக்கத்தில் உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு போலீசார் முன் பணம் பெற்றுக்கொள்ளலாம் என, அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக, கமிஷனர் மற்றும் மாவட்ட எஸ்.பி., அலுவலங்களில், அறிவிப்பு பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது.
முன்பணம் பெற விண்ணப்பம் அளித்தால், வங்கி கணக்கில், 10,000 ரூபாய் செலுத்தப்படும். இதற்கு, மாதம் 1,000 ரூபாய் என, சம்பளத்தில் 10 மாதங்கள் பிடித்தம் செய்யப்படும்.
ஆனால், பணி பதிவேட்டில் சில குளறுபடிகள் உள்ளதாக கூறி, பெரும்பாலான போலீசாருக்கு பொங்கல் பண்டிகை முன்பணம் வழங்கப்படவில்லை என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில்,'காலி பணியிடங்களுக்கு ஏற்ப எங்களுக்கு பணி ஒதுக்கப்படும். ஆனால், சில இடங்களில் உதவி, துணை கமிஷனர்களின் கீழ் பணிபுரிய வேண்டி இருக்கும். இதனால், பணி பதிவேட்டில் சில குளறுபடிகள் உள்ளது.
'இதன் காரணமாக, பலருக்கும் பொங்கல் முன் பணம் கிடைக்கவில்லை. குளறுபடிகளை சரி செய்து, முன்பணம் கிடைக்கச் செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

