திருமூர்த்திமலை கோவிலை சூழ்ந்தது காட்டாற்று வெள்ளம் ;ஆர்ப்பரித்து கொட்டிய பஞ்சலிங்கம் அருவி
திருமூர்த்திமலை கோவிலை சூழ்ந்தது காட்டாற்று வெள்ளம் ;ஆர்ப்பரித்து கொட்டிய பஞ்சலிங்கம் அருவி
ADDED : ஜன 10, 2024 02:03 AM

உடுமலை;உடுமலை திருமூர்த்திமலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, மலைக்கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்து வருகிறது.
இதனால், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில், பல அடி துாரத்திற்கு வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
அருவிக்குச்செல்லும் வழித்தடம், பாலம், உடைமாற்றும் அறை பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்தது.
திருமூர்த்திமலை அடிவாரத்தில், தோணியாற்றின்கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள, பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.மலைப்பகுதி முழுவதும் பெய்த கனமழையால், தோணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது.
சுற்றுப்பிரகாரம், கன்னிமார் கோவில், முருகன், விநாயகர் கோவில், நவக்கிரக சுவாமி கோவில் வரை வெள்ள நீர் சூழ்ந்தது.
மூலவர் சன்னதி, வரிசை தடுப்புகள், உண்டியல் மூழ்கும் வரை மழை நீர் ஓடியது. உண்டியல்கள் ஏற்கனவே, பிளாஸ்டிக்கவர் கொண்டு மூடப்பட்டதால், பாதிப்பு இல்லை.
நேற்று காலை, 11:00 மணிக்கு, படிப்படியாக உயர்ந்த வெள்ள நீர், நேற்று இரவு வரை தொடர்ந்து கோவிலை சூழ்ந்து, ஓடிக்கொண்டிருந்தது.
கோவிலிருந்து பஞ்சலிங்கம் அருவிக்கு செல்லும் பாலத்தையும் மூழ்கடித்து வெள்ள நீர் ஓடியது. 20 ஆண்டுகளுக்குப்பிறகு, நேற்று, அருவி மற்றும் கோவிலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவிக்கு செல்ல தடை
மலைப்பகுதிகளில் கனமழை பெய்ததால், நேற்று காலை முதலே, பஞ்சலிங்கம் அருவிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அமணலிங்கேஸ்வரர்கோவிலில், நேற்று காலை பூஜைகள் மட்டும் செய்யப்பட்டு, நடை சார்த்தப்பட்டது. பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. கோவிலுக்கு செல்லும் பிரதான வழித்தட நுழைவாயிலிலேயே, பக்தர்கள் நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

