காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார்: காதலன் கொலையால் பதட்டம்
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார்: காதலன் கொலையால் பதட்டம்
ADDED : செப் 16, 2025 07:24 AM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 10 ஆண்டு காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதலனுடன் செல்வதாக பெண் தெரிவித்துவிட்டு சென்றார். இதையடுத்து காதலனை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொண்டனர்.
மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து(28) என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். டூ வீலர் மெக்கானிக் வேலை பார்க்கும் வைரமுத்து அதே பகுதி காலனி தெருவில் வசிக்கும் குமார் என்பவரின் மகள் கல்லூரி படிப்பை முடித்த மாலினி (26) என்பவரை 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
மாலினி சென்னையில் வேலை பார்த்து வருகிறார். காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு உள்ள நிலையில் அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் பிரச்னை நிலவி வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மாலினியின் தாயார் விஜயா, வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று பிரச்னையில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து மாலினியின் குடும்பத்தார் மயிலாடுதுறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.
இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாலினி வைரமுத்துவை திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் மாலினியை குடும்பத்தினர் நிராகரித்துள்ளனர். தொடர்ந்து மாலினி வைரமுத்துவின் வீட்டிற்கு சென்றுள்ளார். வைரமுத்துவிற்கும் -மாலினிக்கும் பதிவு திருமணம் சில மாதங்களில் செய்து வைப்பதாக வைரமுத்துவின் பெற்றோர் கூறியுள்ளனர். தொடர்ந்து மாலினி வேலைக்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் டூவீலரில் இரவு வீட்டிற்கு வந்த வைரமுத்துவை வழிமறித்த மர்மநபர்கள் ஓட ஓட விரட்டிச் சென்று சராமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். கழுத்து மற்றும் 2 கைகளிலும் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். உயிருக்கு போராடிய வைரமுத்துவை உறவினர்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாலினியின் குடும்பத்தினர் தான் வைரமுத்துவை கொன்றுவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். டூவீலர் மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று வைரமுத்துவிடம் வாக்குவாதம் செய்யும்போது அப்பவே உன்னை தட்டியிருக்க வேண்டும் என்று மாலினியின் தாயார் விஜயா மிரட்டல் விடுக்கும் வீடியோ பதிவை போலீசாரிடம் வழங்கியுள்ளனர். போலீஸ் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

