ADDED : ஜன 11, 2024 11:06 PM

சென்னை:சென்னைக்கு, வெளியூர்களிலிருந்து பணி நிமித்தமாக வரும் பெண் காவலர்கள் தங்குவதற்கு வசதியாக, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, பெண் காவலர்கள் ஓய்வு இல்லம் உள்ளது.
மொத்தம், 42 பெண் காவலர்கள் தங்கும் வசதியுடன், 21 அறைகள் மற்றும் 15 படுக்கைகளுடன் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லத்தை நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் அஸ்ராகர்க், இணை கமிஷனர்கள் அபிஷேக் தீட்சித், தேவராணி, துணை கமிஷனர் ஸ்ரேயா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் அளித்த பேட்டி:
பெண்களுக்கான பாதுகாப்பான நகரமாக சென்னை இருப்பது பெருமையை அளிக்கிறது. எனவே, பெண் போலீசாருக்கு, துப்பாக்கி தேவையில்லை. இப்பெருமை நீடிக்கும் படி சென்னை காவல்துறையின் செயல்பாடுகள் தொடரும்.
லோக்சபா தேர்தல் பாதுகாப்புக்காக, சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, போலீசாரின் பணியிட மாறுதல்களுக்கான ஏற்பாடுகள் மேற்கொண்டு வருகிறோம். ஜன, 31ம் தேதிக்குள் இப்பணி முடிவடைந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

