ஆஸி., சிறுமிக்கு பறவை காய்ச்சல்: கோல்கட்டாவில் பரவியதா?
ஆஸி., சிறுமிக்கு பறவை காய்ச்சல்: கோல்கட்டாவில் பரவியதா?
ADDED : ஜூன் 09, 2024 11:53 PM
மெல்பர்ன்: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா சென்று திரும்பிய இரண்டரை வயது ஆஸ்திரேலிய சிறுமி, பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டரை வயது சிறுமிக்கு, எச்5என்1 எனப்படும் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மனிதர்களிடம் இந்த தொற்று முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுமி, பிப்., 12 முதல் பிப்., 29 வரை மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா சென்றுள்ளார். மார்ச் 1ல் ஆஸ்திரேலியா திரும்பினார். அடுத்த நாள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மார்ச் 4ல் அவரது அறிகுறிகள் தீவிரமடைந்தது. ஒரு வாரம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இரண்டரை வாரங்களுக்கு பின் வீடு திரும்பினார்.
தொற்றின் மரபணு தொடரை சோதித்தபோது, அவை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கண்டறியப்பட்ட பறவைக் காய்ச்சலின் வகை என்பது தெரியவந்தது.
இந்தியாவில் இருந்த காலகட்டத்தில் கோழிப்பண்ணையிலோ அல்லது காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுடன் அந்த சிறுமி தொடர்பில் இல்லை என கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தொற்று அறிகுறி தென்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.