முதலில் வந்தது முட்டையா, கோழியா? கொலையில் முடிந்தது நண்பர்கள் வாதம்!
முதலில் வந்தது முட்டையா, கோழியா? கொலையில் முடிந்தது நண்பர்கள் வாதம்!
UPDATED : ஆக 04, 2024 01:44 PM
ADDED : ஆக 04, 2024 12:08 PM

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் மதுபோதையில் கோழி முட்டையில் இருந்து வந்ததா? முட்டை கோழியில் இருந்து வந்ததா? என்ற வாக்குவாதத்தில் நண்பனை கொன்றவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மதுபோதை
இன்று உலக நண்பர்கள் தினம். அனைவரும் அவரவர் நண்பர்களுக்கு உற்சாகமாக வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்தோனேசியாவில் மதுபோதையில் சண்டையிட்டு நண்பனையே சக நண்பன் கொன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இஷ்டம்
அதன் விபரம் வருமாறு: புலவேசி மாகாணத்தில் டிஆர் என்பவர் தனது நண்பர் கதிர் மார்க்கஸ் என்பவரை மது குடிக்க அழைத்துள்ளார். அவரும் உற்சாகமாக செல்ல, இருவரும் ஒன்றாக மது அருந்த ஆரம்பித்துள்ளனர். நேரம் ஆக, ஆக இருவரும் தலைக்கேறிய போதையில் இஷ்டம் போல பல்வேறு சங்கதிகளை பேச ஆரம்பித்து இருக்கின்றனர்.
கோழி முட்டை
ஏதேதோ பேச ஆரம்பித்து ஒரு கட்டத்தில் கோழியில் இருந்து முட்டை வந்ததா? இல்லை... முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்று சந்தேகம் இருவருக்கும் எழுந்து இருக்கிறது. பதில் கூறுமாறு கதிர் மார்க்கசை அவரது நண்பர் டிஆர் வற்புறுத்த என்ன சொல்வது என்று தெரியாமல் அந்த விஷயத்தை தவிர்க்க பார்த்துள்ளார். வீட்டுக்கும் கிளம்பிச் சென்றுள்ளார்.
கத்திக்குத்து
ஆனால் மூச்சு முட்ட குடித்து இருந்ததால் முழு போதையில் இருந்த டிஆர், பதில் சொல்லாமல் சென்ற கதிர் மார்க்கஸ் மீது கோபம் பொங்கி வழிந்திருக்கிறது. உடனே தமது பைக்கில் துரத்திச் சென்று வழியில் மடக்கி, கத்தியால் ஆத்திரம் தீர குத்தி கொன்றிருக்கிறார்.
18 ஆண்டுகள் சிறை
தகவலறிந்த உள்ளூர் போலீசார்,சடலத்தை கைப்பற்றி டிஆரை கைது செய்தனர். கொலைக்கு அவர் பயன்படுத்திய ஆயுதத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீதான கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும் என்று குறிப்பிடத்தக்கது.