டிசம்பருக்குள் தேர்தலை நடத்த யூனுசுக்கு வங்கதேச கட்சி கெடு
டிசம்பருக்குள் தேர்தலை நடத்த யூனுசுக்கு வங்கதேச கட்சி கெடு
ADDED : மே 26, 2025 12:01 AM

டாக்கா: வங்கதேசத்தில் பொது தேர்தலை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தும்படி, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முஹமது யூனுசிடம் வங்கதேச தேசியவாத கட்சி வலியுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் தலைமை ஆலோசகர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இங்கு பொது தேர்தல் நடத்துவது தொடர்பாக, ராணுவ தளபதி வாக்கர் - உஸ் - ஜமான் மற்றும் முஹமது யூனுஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.
அரசியல் நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு முஹமது யூனுஸ் தள்ளப்பட்டார். அவரை பிற ஆலோசகர்கள் சமாதானம் செய்தனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து, வங்கதேச தேசியவாத கட்சி, மாணவர் அமைப்பான தேசிய மக்கள் கட்சி மற்றும் ஜமாத் - இ - இஸ்லாமி அமைப்பின் தலைவர்கள் முஹமது யூனுசை நேற்று முன்தினம் இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
வங்கதேச தேசியவாத கட்சி சார்பில், அக்கட்சியின் கொள்கை நிலைக்குழுவினர், யூனுசை டாக்காவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது, பொது தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என, வலியுறுத்தினர்.
இது குறித்து குழு உறுப்பினர் கண்டகர் மொஷ்ரப் ஹுசைன் கூறுகையில், “இந்த சந்திப்பின் போது, தேர்தல் சீர்திருத்தங்களை விரைவாக முடித்து, வரும் டிசம்பருக்குள் பொது தேர்தலை நடத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது,'' என்றார்.