டிரம்பின் 'அழகான மசோதா'வுக்கு எதிர்ப்பு; பதவி விலகினார் தொழில் அதிபர் மஸ்க்
டிரம்பின் 'அழகான மசோதா'வுக்கு எதிர்ப்பு; பதவி விலகினார் தொழில் அதிபர் மஸ்க்
ADDED : மே 30, 2025 06:25 AM

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துக்கு, செலவினங்களை குறைப்பதற்காக ஆலோசனை வழங்கும் அமைப்பில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கு கடந்தாண்டு இறுதியில் நடந்த தேர்தலின்போது, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்புக்கு, பணக்கார தொழிலதிபரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்தார்.
ஆட்சி நிர்வாகத்துக்கு வந்தபின், அரசின் வீண் செலவுகளை குறைக்கவும், நிர்வாக சீர்திருத்தங்கள் செய்யவும், டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த அரசு நிர்வாகத்துக்கான துறை என்ற அரசு நிர்வாகம் சாராத ஆலோசனை அமைப்பை உருவாக்குவதாக டிரம்ப் கூறியிருந்தார்.
இதன்படி, இந்தாண்டு ஜன., 20ல் பதவியேற்றதும், இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக, அதாவது டிரம்புக்கு ஆலோசகராக, எலான் மஸ்க் பதவியேற்றார்.
அரசின் செலவினத்தில், 170 லட்சம் கோடி ரூபாய் குறைப்பதாக முதலில் உறுதி அளித்தார். பின், 85.4 லட்சம் கோடி ரூபாயாகவும், கடைசியில் 12 லட்சம் கோடி ரூபாயாகவும் இலக்கை குறைத்தார். ஆனால், அதையும் செய்ய முடியவில்லை.
முதலில் அதிரடியாக பல துறைகளுக்கான பட்ஜெட்களை குறைத்தார். பல துறைகளில் இருந்து ஆட்களை அதிகளவில் வெளியேற்றினார். இவ்வாறு எலான் மஸ்க் கூறியதை எல்லாம் டிரம்ப் செயல்படுத்தி வந்தார்.
இதனால், அரசு துறைகள், எம்.பி.,க்கள், கட்சியினர், மக்களின் கடும் அதிருப்தி, எதிர்ப்பை எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் சந்திக்க நேர்ந்தது. பல வழக்குகளையும் சந்திக்க நேர்ந்தது.
இதற்கிடையே, எலான் மஸ்க் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே, பல விஷயங்களில் கருத்து மோதலும் ஏற்பட்டது.
'ஏற்கனவே, 130 நாட்கள் மட்டுமே இந்த பொறுப்பில் இருப்பேன் என்று கூறியிருந்தேன். அதன்படி என் பணிக்காலம் முடிந்ததால், அரசு நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். அதே நேரத்தில், இந்த அமைப்பு தொடரும்' என, எலான் மஸ்க் நேற்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
'செலவினங்களை குறைப்பது, நிர்வாக சீர்திருத்தம் செய்வது தேவைதான். ஆனால், இதுவரை, எலான் மஸ்க் என்ன உருப்படியாக செய்தார் என்பது தெரியவில்லை' என, அரசு உயரதிகாரிகள் கூறுகின்றனர்.
டிரம்ப் உடனான இந்த அரசு நிர்வாகத் தொடர்பை எலான் மஸ்க் முறித்துக் கொள்வதற்கு, முக்கிய காரணமாக கூறப்படுவது, 'பெரிய அழகான மசோதா' என்று தகவல் வெளியாகி உள்ளது.
டிரம்ப் சமீபத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த மசோதா, குறுகிய பெரும்பான்மையில், பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. அடுத்தது, செனட் சபையில் நிறைவேற வேண்டும்.
ஆயிரம் பக்கத்துக்கு மேல் உள்ள இந்த மசோதாவில், 2017ல் டிரம்ப் கொண்டு வந்த வரி சீர்திருத்தங்களை நீட்டிப்பது, வரிச்சலுகை அளிப்பது ஆகியவை முக்கிய அம்சமாகும். மேலும், குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவதும் இதில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், இதற்கு, எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 'இது பெரியதும் இல்லை, அழகாகவும் இல்லை' என, அவர் விமர்சித்திருந்தார். இது அரசின் செலவுகளை அதிகரிக்க செய்யும் என்பது அவரது வாதம்.
அதை டிரம்ப் ஏற்கவில்லை. 'இந்த மசோதாவில் பெரியது, அழகு இரண்டும் உள்ளது. சில பிரிவுகளை நான் விரும்பவில்லை. ஆனாலும், ஒட்டுமொத்தமாக இது மிகப் பெரிய பலனை அளிக்கும். நடைமுறைக்கு வந்த பிறகே, அதன் பலன் தெரியும்' என, டிரம்ப் கூறியுள்ளார்.
எலான் மஸ்கை விமர்சித்துள்ள குடியரசு கட்சியினர், டிரம்பின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில்தான், இதற்கு மேலும் இருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என, ஆலோசகர் பதவியில் இருந்து எலான் மஸ்க் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.