காலிஸ்தான் பயங்கரவாதி மறைவுக்கு பார்லி.,யில் மவுன அஞ்சலி: கனடா குசும்பு, இந்தியா பதிலடி
காலிஸ்தான் பயங்கரவாதி மறைவுக்கு பார்லி.,யில் மவுன அஞ்சலி: கனடா குசும்பு, இந்தியா பதிலடி
ADDED : ஜூன் 19, 2024 12:33 PM

வான்கூவர்: கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக அந்நாட்டு பார்லிமென்டில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக, அந்நாட்டிற்கான இந்திய தூதரகம், 1985 ல் , ஏர் இந்தியா விமானத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்த 329 பேர் நினைவாக மவுன அஞ்சலி கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்து உள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்வாரா அருகே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் பார்லிமென்டில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இது தொடர்பாக வான்கூவரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலையில் நிற்கிறது. இந்த உலகளாவிய அச்சுறுத்தலை சமாளிக்க அனைத்து நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது.
ஏர் இந்தியா(கனிஷ்கா) விமானத்தில் பயங்கரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததன் 39 வது ஆண்டு நினைவு தினம் ஜூன் 23ம் தேதி நடக்கிறது. இந்த விபத்தில், 86 அப்பாவி குழந்தைகள் உட்பட 329 அப்பாவிகள் உயிரிழந்தனர். சிவில் விமான வரலாற்றில், கொடூரமான பயங்கரவாதம் தொடர்பான தாக்குதலாக கருதப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் நினைவாக ஸ்டான்லி பார்க் பகுதியில் ஏர் இந்தியா நினைவிடத்தில் 23ம் தேதி மாலை 6:30 மணிக்கு மவுன அஞ்சலி நடக்கறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நிகழ்வில், இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.