வரி விதிக்கும்படி வற்புறுத்துவதா? அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
வரி விதிக்கும்படி வற்புறுத்துவதா? அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
ADDED : செப் 16, 2025 02:41 AM

பீஜிங் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் சீனா மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும் என, 'ஜி - 7' நாடுகளை அமெரிக்கா வற்புறுத்தியதற்கு அந்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் மூன்று ஆண்டுகளை கடந்தும் நடக்கிறது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது வரி விதிக்க வேண்டும் என, உலக நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில், சீனா மீது, ஜி - 7 மற்றும் நேட்டோ நாடுகள் 50 - 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இது குறித்து, சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் நேற்று கூறியதாவது:
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால், சீனா மீது கூடுதல் வரி விதிக்கும்படி, ஜி - 7 மற்றும் நேட்டோ நாடுகளை அதிபர் டிரம்ப் வலியுறுத்தியது, சர்வதேச வர்த்தக விதிகளை கடுமையாக மீறும் நடவடிக்கை. இந்த ஒருதலைபட்சமான மிரட்டலை கண்டிக்கிறோம். அழுத்தங்களும், மிரட்டல்களும் ஒருபோதும் பிரச்னைக்கு தீர்வாகாது என்பதை பல சந்தர்ப்பங்கள் நிரூபித்துள்ளன. சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன்களை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலுக்கு இடையே, பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் குறித்து, சீனா - அமெரிக்கா குழுக்களுக்கிடையே, ஸ்பெயினில் இரண்டாவது நாளாக நேற்று பேச்சு நடந்தது.