சீனர்களே வாருங்கள்! மாலத்தீவு அழைக்கிறது * மாலத்தீவுகள் விவகாரம்
சீனர்களே வாருங்கள்! மாலத்தீவு அழைக்கிறது * மாலத்தீவுகள் விவகாரம்
ADDED : ஜன 10, 2024 01:00 AM
புதுடில்லி,மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிப்பதாக நம் நாட்டில் பலரும் அறிவித்துள்ள நிலையில், 'மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள்' என, அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு சீனர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் சில அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டனர். இது பெரும் கொந்தளிப்பை நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
கிண்டல்
மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிப்பதாக, பல பிரபலங்களும், சுற்றுலா அமைப்பாளர்களும் அறிவித்துள்ளனர். லட்சத்தீவில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்கு, மாலத்தீவுகள் அமைச்சர்கள், கிண்டல், கேலி செய்தனர்.
நம் நாட்டு மக்களின் கொந்தளிப்பை அடுத்து, அந்த அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தியாவை நாங்கள் மதிக்கிறோம். அமைச்சர்களின் கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல என, மாலத்தீவுகள் அரசு சமாதானப்படுத்த முயன்றது.
ஆனாலும், மாலத்தீவுகளை புறக்கணிப்போம் என்ற கோஷம் நம் நாட்டில் வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில், சி.ஏ.ஐ.டி., எனப்படும் அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு, 'தொழில் ரீதியாகவும் மாலத்தீவுகளை புறக்கணிப்போம்' என, கூறியுள்ளது.
நம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாகவும், அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மாலத்தீவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
மாலத்தீவுகளுடன், எவ்வித தொழில், வர்த்தக உறவும் கூடாது என, வர்த்தகர்கள் மற்றும் ஏற்று மதியாளர்களுக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
சுற்றுலா தான், மாலத்தீவுகளின் முக்கிய வருவாய் ஈர்க்கும் தொழில். இந்தியாவின் புறக்கணிப்பால், அந்த நாடு கதிகலங்கியுள்ளது. அந்த நாட்டுக்கு சுற்றுலா வரும் பயணியரில், இந்தியர்கள் முன்னிலையில் உள்ளனர்.
கடும் கண்டனம்
இந்தியர்கள் புறக்கணிப்பு, தன் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய இடியாக அமையும் என்பதை, மாலத்தீவுகள் புரிந்து கொண்டுள்ளது.
இதையடுத்து, அமைச்சர்களின் பேச்சுகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாக, மாலத்தீவுகள் சுற்றுலா தொழில் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, சீனா சென்றுள்ள மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு, சீனர்கள் அதிக எண்ணிக்கையில் மாலத்தீவு சுற்றுலா வர கோரிக்கை விடுத்துஉள்ளார்.

