ஈரானில் மாயமான 400 கிலோ யுரேனியம்! அமெரிக்கா தகவல்
ஈரானில் மாயமான 400 கிலோ யுரேனியம்! அமெரிக்கா தகவல்
UPDATED : ஜூன் 24, 2025 04:55 PM
ADDED : ஜூன் 24, 2025 04:10 PM

வாஷிங்டன்: ஈரான் வைத்து இருந்த 400 கிலோ செறியூட்டப்பட்ட யுரேனியும் எங்கே போனது என்று தெரியவில்லை என அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாயமான இந்த யுரேனியம் மூலம் 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என தெரிகிறது.
அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த இரண்டு வாரமாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில், நேற்று முன்தினம் அந்நாட்டின் முதன்மையான மூன்று அணுசக்தி நிலையங்களான போர்டோவ், நடான்ஸ், மற்றும் இஷாஹன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: ஈரான் சேமித்து வைத்து இருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே போனது என தெரியவில்லை. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் சேதம் அடைந்து இருக்கும்.அல்லது அழிந்திருக்கும். ஆனால், அதனை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
போர்டோவ் அணுசக்தி நிலையத்தை அழிப்பதே தாக்குதலின் நோக்கம். மற்ற நிலையங்களுக்கும் சேதம் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம். தாக்குதலில், போர்டோவ் அணுசக்தி நிலையத்திற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னர், யுரேனியத்தை பாதுகாப்பான இடங்களுக்கு ஈரான் மாற்றியிருக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் போர்டோவ் அணுசக்தி நிலையங்கள் முன்பு 16 டிரக்குகள் வரிசையில் நின்றது செயற்கைகோள் எடுத்த புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு பிறகு அந்த இடத்தில் அந்த டிரக்குகள் காணப்படவில்லை. அதில் என்ன கொண்டு செல்லப்பட்டது என தெரியவில்லை என அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.