போர் நிறுத்தத்தை மீறி தாக்கியதாக ஈரான் மீது குற்றச்சாட்டு; பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு இஸ்ரேல் உத்தரவு
போர் நிறுத்தத்தை மீறி தாக்கியதாக ஈரான் மீது குற்றச்சாட்டு; பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு இஸ்ரேல் உத்தரவு
UPDATED : ஜூன் 24, 2025 02:40 PM
ADDED : ஜூன் 24, 2025 01:20 PM

ஜெருசலேம்: போர் நிறுத்தத்தின் எந்தவொரு மீறலுக்கும் கடும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானுக்கு, இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில், ஈரானுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 12 நாட்களாக நீடித்து வந்த ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் இன்று முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பை முதலில் ஏற்க மறுத்த ஈரான், சிறிது நேரத்திலேயே போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தது. இதை தொடர்ந்து இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய சம்மதம் தெரிவித்தது.
எப்படியோ, மத்திய கிழக்கு நாடுகளை கடந்த 12 நாளாக அச்சுறுத்தி வந்த பயங்கர போர் இன்றுடன் முடிவுக்கு வருவது உறுதியாகி விட்டது. இந்நிலையில், இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை அகற்றுவதில் அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்கா ஆதரவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இருதரப்பு போர்நிறுத்தத்திற்கான அதிபர் டிரம்பின் முன் மொழிவை இஸ்ரேல் ஒப்புக் கொள்கிறது. போர் நிறுத்தத்தின் எந்தவொரு மீறலுக்கும் இஸ்ரேல் கடும் பதிலடி கொடுக்கும்.போர் நிறுத்தம் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவது சரிபார்க்கப்படும் வரை இஸ்ரேல் மக்கள் ராணுவத்தின் உத்தரவுகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில், ஈரானுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளது.