கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமினை பாக்., சுப்ரீம் கோர்ட்டில் உதாரணம் காட்டிய இம்ரான் கான்
கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமினை பாக்., சுப்ரீம் கோர்ட்டில் உதாரணம் காட்டிய இம்ரான் கான்
ADDED : ஜூன் 07, 2024 05:34 PM

புதுடில்லி: ‛‛ இந்தியாவில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரசாரம் செய்ய இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் தனக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்தப்படுகிறது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வழக்கு ஒன்று தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இம்ரான் கான் ஆஜரானார். அப்போது நீதிபதி ஒருவர், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் கட்சி தலைவராக உள்ள இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது வருத்தத்திற்குரியது என்றார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் முன்பு இம்ரான் கான் கூறியதாவது: இந்தியாவில் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரசாரம் மேற்கொள்ள சிறையில் இருந்த டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இந்திய உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. ஆனால், பாகிஸ்தானில் நான் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறேன். தேர்தலில் நான் நிற்பதற்கு தடை விதிக்கும் வகையில், தேர்தல் நடந்த பிப்.,8 ம் தேதிக்கு 5 நாள் முன்பு எனக்கு தண்டனை வழங்கப்படுகிறது. நவாஸ் ஷெரீப் சிறையில் இருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட வசதிகளுக்கும், தற்போது எனக்கு வழங்கப்படும் வசதிகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.