தலையிட்டால் சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
தலையிட்டால் சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
UPDATED : ஜூன் 19, 2025 12:41 PM
ADDED : ஜூன் 18, 2025 07:06 PM

டெஹ்ரான்: இஸ்ரேல் உடனான மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால், சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும் என ஈரான் எச்சரித்து உள்ளது.
இது தொடர்பாக ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி நாட்டு மக்களுக்கு டிவி மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது: ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. இதற்கு அந்நாடு தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். திணிக்கப்பட்ட போர் மற்றும் திணிக்கப்பட்ட அமைதிக்கு எதிராக ஈரான் உறுதியுடன் நிற்கிறது. யாரிடமும் சரணடைய மாட்டோம்.
ஈரானையும்,அதன் வரலாற்றையும் அறிந்தவர்கள், அச்சுறுத்தலின் மொழிக்கு ஈரானியர்கள் சரியாக பதிலளிக்க மாட்டார்கள் என்பதை அறிவார்கள். அமெரிக்க ராணுவம் தலையிட்டால் சரி செய்ய முடியாத அளவுக்கு பின் விளைவு ஏற்படும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்திருக்க வேண்டும். கடவுள் மீது நம்பிக்கை வைத்து அதிகாரிகள் முழு பலத்துடன் தங்களது பணிகளை தொடர வேண்டும். கடவுள் நிச்சயம் நம்மை வெற்றிபெறச் செய்வார். அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடந்த போது, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அந்த கட்டத்தில் ஈரான் பதிலடி கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது என்பது இஸ்ரேலின் பலவீனத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.