sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் விடுவிப்பு

/

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் விடுவிப்பு

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் விடுவிப்பு

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் விடுவிப்பு

1


UPDATED : ஜூலை 09, 2024 11:26 PM

ADDED : ஜூலை 09, 2024 11:21 PM

Google News

UPDATED : ஜூலை 09, 2024 11:26 PM ADDED : ஜூலை 09, 2024 11:21 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்களை விடுவிக்க ஏற்பாடு செய்வதாக, பிரதமர் நரேந்திர மோடியிடம், அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது 2022ல் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்றாவது ஆண்டாக நீடிக்கிறது. இதுவரை இரு தரப்பிலுமாக ஒரு லட்சம் பேருக்கு மேல் இறந்துள்ளனர்.

அதில் 11,000 பேருக்கு மேல் அப்பாவி சிவிலியன்கள். ரஷ்ய தரப்பில் மரண எண்ணிக்கை 50,000 தாண்டி விட்டதாக பி.பி.சி., சொல்கிறது. உக்ரைன் ராணுவ பலி 32,000 என அது கணக்கிட்டுள்ளது.

கூலிப்படையினர்


அமெரிக்கா தலைமையில் மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குகின்றன. எனவே, ரஷ்யா எதிர்பார்த்த மாதிரி சீக்கிரமாக போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் எதிர் தாக்குதல் பலமாக இருப்பதால், ராணுவ பயிற்சியே பெறாத ஆர்வலர்கள், கைதிகள், கூலிப்படையினர், வெளிநாட்டினர் ஆகியோரை போர்க்களத்தில் முன்னிறுத்தியது ரஷ்யா. அவர்கள் கதி என்ன என்பதை சொல்ல தேவையில்லை.

அவ்வாறு ரஷ்யாவின் சார்பாக களம் இறக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் உண்டு. குஜராத், தெலுங்கானா, கேரளா மாநிலங்களை சேர்ந்த 20 முதல் 30 வயது வரையிலான வாலிபர்கள் உக்ரைனின் தாக்குதலில் இறந்த செய்திகள் இந்தியாவில் அதிர்ச்சி ஏற்படுத்தின. போர் புரிவதற்கு என்பதை சொல்லாமல், ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர் வேலை, கவர்ச்சியான சம்பளம் என ஆசைகாட்டி பல இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

இன்னொரு நாட்டில் நடக்கும் போரில் இந்தியர்கள் கொல்லப்படுவதை கண்டித்து குரல்கள் எழுந்தன. இந்தியர்களை உடனடியாக ராணுவ பணிகளில் இருந்து விடுவிக்கும்படி ரஷ்யாவை மத்திய அரசு வலியுறுத்தியது. ஆவன செய்வதாக ரஷ்யா சொன்னதே தவிர, இந்தியர்கள் எவரும் அங்கிருந்து திரும்பி வரவில்லை.

இந்த பின்னணியில், இந்தியா - ரஷ்யா இடையிலான 22வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்க, இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார்.

Image 1291559


Image 1291560


Image 1291561


சுற்றிக்காட்டினார்


நேற்று முன்தினம், மோடிக்கு புடின் இரவு விருந்து அளித்தார். புடினை கட்டிப்பிடித்து மோடி வாழ்த்தினார். நேற்று இரு தரப்பு மாநாடு நடந்தது. மாஸ்கோவில் சில இடங்களை மோடிக்கு சுற்றிக் காட்டினார். ரஷ்யாவின் மிக உயர்ந்த விருதை மோடிக்கு வழங்கி, கழுத்தில் பதக்கம் அணிவித்தார்.

இந்த சந்திப்புகளின்போது, ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் குறித்து மோடி கவலை தெரிவித்தார். இந்தியர்களை விடுவித்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு வலியுறுத்தினார்.

நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக புடின் உறுதி அளித்தார். இது மோடியின் பயணத்துக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக மேலை நாடுகள் அணி திரண்டுள்ள சூழலில், மோடியின் மாஸ்கோ பயணம் உலகம் முழுதும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. உலகமே கண்டிக்கும் புடினை, மோடி கட்டி அணைப்பதா என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொந்தளிக்கிறார்.

அமெரிக்காவுடன் பல விஷயங்களில் இந்தியா நெருங்கி வந்தாலும், அதற்காக நீண்டகால ரஷ்ய உறவை விட்டுக் கொடுக்க முடியாது என்று மோடி அரசு தெளிவுபடுத்தி விட்டது. சர்வதேச அரங்கில் கடும் எதிர்ப்பை சந்திக்கும் ரஷ்யாவுக்கு இந்த நேரத்தில் மோடியின் வருகை தார்மிக ரீதியில் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், மேலைநாடுகளின் கடுப்பை அதிகரிக்கும் விதமாக மோடியை, புடின் விழுந்து விழுந்து உபசரித்தார்.

இத்தனைக்கும் மத்தியில், உக்ரைன் போரை நிறுத்துமாறு புடினுக்கு மோடி நேரடியாகவே அட்வைஸ் கூறினார். நேற்று முன் தினம் உக்ரைனில் ரஷ்யா வீசிய குண்டுகளுக்கு பல குழந்தைகள் பலியானதை சுட்டிக் காட்டிய மோடி, “இது ஏற்க முடியாத கொடுமை. இதற்கு சீக்கிரம் முடிவு கட்ட வேண்டும்,” என்றார்.

அவர் மேலும் சொன்னார்: அமைதி திரும்ப இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும். குண்டுகள், துப்பாக்கி, தோட்டாக்களுக்கு இடையே அமைதி முயற்சி பலன் அளிக்காது. மனிதநேயத்தை நம்புவோர் எவரும், ஒரு உயிர் பலியாகும்போது வலியை உணருவர். என் நாடும் 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் சவால்களை சந்தித்து வருகிறது. பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை நாங்கள் கண்டிக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் கொரோனா, அதை தொடர்ந்து மோதல்கள் என பல சவால்களை உலகம் சந்தித்து வருகிறது. ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்வு காண்போம்.இவ்வாறு மோடி பேசினார்.

ரஷ்யாவின் உயர் விருது

கடந்த 2019ல், ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி சென்ற போது, அந்நாட்டின் உயரிய விருதான, 'ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்' வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இயேசுவின் முதல் அப்போஸ்தலரும், ரஷ்யாவின் புரவலர் துறவியுமான செயின்ட் ஆண்ட்ரூவின் நினைவாக, 1698ல், ஜார் பீட்டர் தி கிரேட் என்பவரால், இந்த விருது நிறுவப்பட்டது. அதிபர் மாளிகை விழாவில், 'ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்' விருதை, நேற்று பிரதமர் மோடிக்கு வழங்கி புடின் கவுரவித்தார். இந்த விருதை பெறும் முதல் இந்தியர் பிரதமர் மோடி.



புடினுக்கு பாராட்டு

ரஷ்யாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் மோடி பேசியதாவது:புடினுடன் என் நட்பு அலாதியானது. ஆறாவது முறையாக ரஷ்யாவுக்கு வந்துள்ளேன். நாங்கள் 17 முறை சந்தித்து பேசியுள்ளோம். கடந்த, 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய இளைஞர்கள் தோல்விகளை ஏற்க தயாராக இல்லை. டி-20 கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்து வரை போராடி உலக கோப்பை வென்றோம். அதுபோன்றவர்கள் நம் இளைஞர்கள்.சவால்களுக்கு சவால் விடுப்பது என்னுடைய மரபணுவில் உள்ளது. 21ம் நுாற்றாண்டு இந்தியாவுக்கானது என்று நான் கூறியபோது பலரும் ஆச்சரியப்பட்டனர். அது தற்போது நனவாகி வருகிறது.



ஜெலன்ஸ்கி ஏமாற்றம்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:கீவ் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்தனர். பள்ளிகள், மருத்துவமனைகள் என, 100 கட்டடங்கள் சேதமடைந்தன. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் மோடி, உலகின் அதிக ரத்தம் தோய்ந்த குற்றவாளி புடினை கட்டிப் பிடிப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.



மோடிக்கு புடின் நன்றி


இரு தரப்பு பேச்சின்போது, புடின் பேசியதாக, அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனமான, 'டாஸ்' கூறியுள்ளதாவது:

தற்போதுள்ள மிக முக்கியமான பிரச்னையான உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு பிரதமர் மோடி காட்டும் அக்கறைக்கு நன்றி. குறிப்பாக அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளதை வரவேற்கிறேன்.

இந்தியாவுடன் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இணைந்து செயல்பட்டு வருகிறோம். பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் பல உலகளாவிய விவகாரங்கள் தொடர்பாக பேசும் வாய்ப்பு கிடைத்தது.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளதாவது:

பிரதமர் மோடியின் முயற்சியை, 'நேட்டோ' நாடுகள் ஏற்குமா என்பது தெரியவில்லை. அவர்கள் அடிக்கடி சந்தித்து பேசுகின்றனர். இந்த விஷயத்தில் அவர்கள் என்ன முடிவு எடுக்கின்றனர் என்பதை கவனித்து வருகிறோம்.

பல நாட்டுத் தலைவர்கள் அமைதி வழியில் தீர்வு காணும்படி தொடர்ந்து கூறி வருகின்றனர். ஒரு சில விஷயங்களை சிலர் ஏற்காமல் இருக்கலாம். சில நேரங்களில் பல விஷயங்களை சிலர் ஏற்காமல் இருக்கலாம். ஆனால் பேச்சு நடத்தினால், அதனால் நல்ல தீர்வு காண முடியும் என்பதை நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அணுசக்தி துறையில் ஒத்துழைப்பு


மாஸ்கோவில் உள்ள அனைத்து ரஷ்ய கண்காட்சி மையத்தை, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுடன் இணைந்து, பிரதமர் மோடி சுற்றிப் பார்த்தார். அங்குள்ள அணுசக்தி தொடர்பான பிரிவை, ரஷ்ய எரிசக்தி கழகத்தின் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸி லிக்காசெவ் சுற்றிக்காட்டி விரிவாக விளக்கினார்.

அப்போது, இந்தியாவில் சிறிய அளவிலான அணுமின் நிலையங்களை அமைக்க தேவையான ஒத்துழைப்பை அளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், 'அணுசக்தி தொழில்நுட்பத்தை அமைதிக்காக பயன்படுத்துவதில் ஒத்துழைப்பு என்பது ரஷ்யா உடனான பன்முக ஒத்துழைப்பின் முக்கிய துாண்' என, குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us