ADDED : மே 17, 2025 12:11 AM

நியூயார்க்: 'புக்கர்' பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை, கத்தியால் குத்தி கொல்ல முயன்ற நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் பிறந்தவர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 77. இவர் எழுதிய, 'தி சாத்தானிக் வெர்ஸஸ்' என்ற புத்தகம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவருக்கு முஸ்லிம் நாடுகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில் வசித்த ருஷ்டி, 2000ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். இதற்கிடையே, 2022ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில், சல்மான் ருஷ்டி பங்கேற்றார்.
அப்போது, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வந்த லெபனானைச் சேர்ந்த ஹாரி மட்டார், 26, என்பவர் மேடைக்குச் சென்று சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்களின் சிகிச்சையால், ருஷ்டி உயிர் பிழைத்தார்.
கைதான ஹாரி மட்டார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நியூயார்க் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.