மீடியா ஜாம்பவான் ராபர்ட் முர்டோ 5வது திருமணம்: 93 வயதில் 67 வயது மூதாட்டியை மணந்து குதூகலம்
மீடியா ஜாம்பவான் ராபர்ட் முர்டோ 5வது திருமணம்: 93 வயதில் 67 வயது மூதாட்டியை மணந்து குதூகலம்
ADDED : ஜூன் 03, 2024 12:49 PM

நியூயார்க்: மீடியா ஜாம்பவனாக கருதப்படும் ராபர்ட் முர்டோ, தனது 93 வயதில் 67 வயது மூதாட்டியை 5வதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.
168 ஆண்டுகால பாரம்பரியமிக்க 'நியூஸ் ஆப் த வேர்ல்டு' பத்திரிகை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக மூடப்பட்டது. அப்போது இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த ராபர்ட் முர்டோ பதவி விலகினார். அதுமட்டுமல்லாமல், மீடியா ஜாம்பவனாக கருதப்படும் ராபர்ட் முர்டோ, பாக்ஸ் நியூஸ் கார்ப்பரேஷன் உட்பட பல்வேறு ஊடக நிறுவனங்களை நிறுவினார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 19.9 பில்லியன் டாலர்கள்.
1956ல் முதல் திருமணம் செய்துகொண்ட இவர், அதில் விவாகரத்து பெற்றார். பின்னர் 1967, 1999 மற்றும் 2016ல் என 3 திருமணங்கள் செய்துள்ளார். அவை அனைத்தும் விவாகரத்தில் முடிந்தன. இந்த நிலையில், தனது 67 வயது காதலியான எலெனா ஜோகோவாவை 5வது திருமணம் செய்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த எலெனா, அமெரிக்காவில் குடிபெயர்ந்துள்ளார். இவர் ரஷ்ய நாட்டு அரசியலில் ஈடுபட்டுவரும் அலெக்சாண்டரின் முன்னாள் மனைவி.
கடந்த ஓராண்டாக எலெனா - ராபர்ட் முர்டோ காதலித்து வந்துள்ளனர். தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ராபர்ட் முர்டோவின் பண்ணை வீட்டில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. முர்டோவுக்கு ஏற்கனவே 6 பிள்ளைகள் உள்ளனர்.