ADDED : ஜூன் 03, 2025 04:29 AM
கீவ் : ஆப்பரேஷன் சிலந்தி வலை என்ற பெயரில், ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல், உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. இந்த தாக்குதலில், 30 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது, ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 பிப்.,ல் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவும் இந்த போர் தொடர்கிறது.
போர் நிறுத்தம் தொடர்பாக, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எந்த நிபந்தனைகளுக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக்கொள்ளவில்லை.
ஐரோப்பிய நாடான துருக்கியின் இஸ்தான்புல்லில், நேற்று இரு தரப்புக்கும் இடையே அமைதி பேச்சு துவங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம், ரஷ்யாவின், ஐந்து விமானப்படை தளங்களை குறிவைத்து, உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதில், ரஷ்யாவின், 30 போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன.
'ஆப்பரேஷன் ஸ்பைடர் வெப்' எனப்படும் ஆப்பரேஷன் சிலந்தி வலை என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், இந்த போரில் நடந்த உச்சபட்ச பாதிப்பை ரஷ்யாவுக்கு ஏற்படுத்தியுள்ளது. மேலும், உக்ரைன் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலாகவும் இது உள்ளது.
இது மிகவும் விரிவாக திட்டமிடப்பட்டு, சரியான நேரத்தில், சரியான வகையில் செயல்படுத்தப்பட்டதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.