எங்கள் உயிர்வாழ்விற்கான போராட்டம்: ஈரான் மீது தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பேச்சு
எங்கள் உயிர்வாழ்விற்கான போராட்டம்: ஈரான் மீது தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பேச்சு
UPDATED : ஜூன் 13, 2025 09:35 AM
ADDED : ஜூன் 13, 2025 09:24 AM

ஜெருசலேம்: எங்கள் உயிர்வாழ்விற்கான போராட்டம் என ஈரான் மீது தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை துவக்கியது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்கின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:
ஈரானில் 'Operation Rising Lion என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் உயிர்வாழ்விற்காக ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்க, ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலை நீக்க, இந்த தாக்குதல் நடவடிக்கை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும். எங்கள் துணிச்சலான விமானிகள் ஈரான் முழுவதும் உள்ள இலக்குகளை தாக்குகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில், 9 அணுகுண்டுகளை உருவாக்குவதற்கான பதப்படுத்தப்பட்ட யுரேனியத்தை ஈரான் தயாரித்து விட்டது. அதைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக ஈரான் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் மிகக் குறுகிய காலத்தில் அணுகுண்டுகளை ஈரான் உருவாக்கிவிடும் அபாயம் உள்ளது. இது, இஸ்ரேல் நாட்டுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல். எங்கள் நாட்டை அழிப்பதாக கூறுபவர்கள், அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்வதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது.
அந்த நோக்கத்துடன் தான் ஈரான் நாட்டின் அணு ஆயுத உற்பத்தி மையங்கள் மீது தாக்குதலை துவக்கி உள்ளோம். கடந்தாண்டு ஈரான் இஸ்ரேல் மீது 300 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஒவ்வொரு ஏவுகணையும் ஒரு டன் எடையிலான வெடி பொருட்களை கொண்டதாக இருந்தது. வரும் காலத்தில் இந்த ஏவுகணைகள் அனைத்தும் அணு ஆயுதங்களை ஏந்தி வந்து இஸ்ரேலை தாக்கும் நிலை ஏற்படும்.
அதுபோன்ற பத்தாயிரம் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்தை ஈரான் செயல்படுத்தி வருகிறது. மூன்று ஆண்டுகளில் ஈரான் இந்த நிலையை எட்டிவிடும். இந்த நிலையை தடுத்து நிறுத்தி ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இஸ்ரேல் இப்போது தாக்குதலை தொடங்கியுள்ளது. இப்போது செயல்படவில்லை எனில் நாங்கள் இங்கே இருக்கமாட்டோம். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.
இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
* ஈரானின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
* தேவையில்லாமல் இருப்பிடத்தைவிட்டு வெளியேற வராதீர்கள்.
* உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.