ADDED : செப் 16, 2025 06:39 AM

வாஷிங்டன் : அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில், மோட்டல் எனப்படும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் மேலாளராக பணியாற்றியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரமவுலி நாகமல்லையா.
இவருக்கும், அவருடன் பணியாற்றும் சக ஊழியரான யோர்டனிஸ் கோபோஸ் மார்டினஸ் என்பவருக்கும், வாஷிங் மிஷின் உபயோகிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த மார்டினஸ், நாகமல்லையாவின் தலையை துண்டித்து கொலை செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்படார். விசாரணையில், அவர் கியூபா நாட்டைச் சேர்ந்தவர் என்றும், ஆவணங்களின்றி அமெரிக்காவில் வசித்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவு:
அனைவராலும் மதிக்கப்படும் மரியாதைக்குரியவராக இருந்தவர் நாகமல்லையா; கடின உழைப்பாளி. அவரை கொலை செய்த குற்றவாளி மார்டினஸ், அமெரிக்காவில் இருந்திருக்கவே கூடாது. அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
குற்றப் பின்னணி உடைய மார்டினஸ், அமெரிக்காவில் வசித்ததற்கு முன்னாள் அதிபர் ஜோ பைடனின் குடியேற்ற கொள்கைகளே காரணம். அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.