/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
லோதிரோடு ராம் மந்திரில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி
/
லோதிரோடு ராம் மந்திரில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி
மே 21, 2024

அனைத்து உலக மக்களும் இறைவனுடைய பேரருளைப் பெற்று நன்றாக வாழ வேண்டும். இணக்கமாக வாழ வேண்டும்'' என்ற நல்ல எண்ணத்துடன் ஒரு மகான் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் என்கிற திவ்ய தலத்தில் அவதரித்தார். அவர்தான் ஸ்ரீ ராமானுஜர். 120 ஆண்டுகள் இந்த நிலவுலகில் வாழ்ந்தார்.
அவரது 1007 ம் ஜெயந்தியை உலகெங்கும் உள்ள வைணவத் தலங்கள் கொண்டாடினார்கள். தில்லி லோதிரோடு ராம் மந்திரில் பத்துநாள் உற்சவம் கொண்டாடப்பட்டது. அன்பர்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்த்தை தினமும் பாராயணம் செய்து ஜெயந்தி அன்று பூர்த்தி செய்தார்கள்.
அன்று மாலை ராமானுஜரை கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து பெருமாள் சந்நிதி முன்பு மரியாதைகள் செய்வித்தனர்.
ராமானுஜரை பற்றிய குறிப்புகள்:-
வைணவ சமயத்தை தோற்றுவித்தவரும்,சாதி,மதங்களைக் கடந்து மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என் உயரிய கருத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்திய மகான் ஸ்ரீ ராமானுஜர். ஸ்ரீ ராமானுஜர் கிபி 1017ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அப்போது பூதபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார்.
திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணனின் படுக்கையாக உள்ள ஆதிசேஷன், ராமாவதாரத்தில் ராமர் தம்பி லஷ்மணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணருக்கு அண்ணன் பலராமராகவும் தோன்றினார் என்கின்றன புராணங்கள். அந்த ஆதிசேஷனே கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார் என்பது நம்பிக்கை.
தான் ஒருவன் நரகம் சென்றாலும் பரவாயில்லை..பலகோடி மக்கள் சொர்க்கம் செல்ல வேண்டும் என்று 'ஓம் நமோ நாராயணா' என்ற எட்டெழுத்து மந்திரத்தை திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி உரக்கச்சொன்ன மகான் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த தினம் இன்று(12/5/2024) புரட்சித்துறவி என்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர் செய்த தியாகம் அளவிடமுடியாதது. ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி நாளில் அவரது பாதம் பணிவோம்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி