ADDED : ஜூன் 16, 2025 07:16 AM

நொடி பொழுதில் தோன்றும் யோசனையை செயல்படுத்தி, தொழிலதிபர்களாக சாதனை படைத்தவர்கள் ஏராளம்.
அவர்களில் ஒருவர், பெங்களூரை சேர்ந்த இந்திரா பிரசாந்த், 44. உணவு சாப்பிடும் மேஜையை சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட யோசனை, இன்று அவரை பெண் தொழில் முனைவோராக மாற்றி உள்ளது.
கெமிக்கல் இன்ஜனியரிங், எம்.பி.ஏ., முடித்த இந்திரா பிரசாந்த், பல நிறுவனங்களில் பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பின், குழந்தைகளை வளர்ப்பதற்காக, 2012ல் பணியை ராஜினாமா செய்தார்.
தான் தொழில் முனைவோராக மாறியது தொடர்பாக, இந்திரா பிரசாந்த் கூறியதாவது:
எனக்கு வீட்டை அலங்காரமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் விருப்பம் அதிகம். பிரின்டிங் மற்றும் பூர்வீக கலை மீதும் பற்று உண்டு.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய பின், உணவு அருந்தும் மேஜையின் துணியில் கறைகள் ஒட்டி இருந்தன. அந்த கறையை நீக்கிக் கொண்டிருந்தேன். வீட்டில் இரு குழந்தைகள் இருப்பதால், மூன்று நாட்களுக்கு ஒருமுறை மேஜை துணிகளை துவைத்து கொண்டிருந்தேன்.
அப்போது, குழந்தைகளுக்கு பயன்படுத்தும் துணியின் தன்மை எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. இந்த துணிகள் கறை படிந்தாலும், தண்ணீர் கொட்டினாலும், சுலபமாக துடைத்து விடக்கூடியாக இருந்தது. இதையே மேஜை துணியாக ஏன் பயன்படுத்த கூடாது என்று யோசனை எழுந்தது.
இந்த மேஜை துணியை உற்பத்தி செய்ய, எந்த தொழிற்சாலையும் முன்வரவில்லை. இது தொடர்பாக ஆய்வு செய்தேன். துணி தொடர்பான நிபுணர்களை சந்தித்தேன். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், ஜெய்பூரை சேர்ந்த இரண்டு பிளாக் பிரின்டர்ஸ் தொழிற்சாலை, என் மீது நம்பிக்கை வைத்ததன் விளைவாக, என் கனவு நனவானது.
மூன்று ஆண்டுகளுக்கு முன், 'தி யார்டு ஹவுஸ்' பெயரில் நிறுவனத்தை துவக்கினேன். இதுவரை, 30,000க்கும் மேற்பட்ட மேஜை துணிகள் விற்பனையாகி உள்ளன. 10,000க்கும் மேற்பட்ட வீடுகளில், இந்த மேஜை துணிகள் அலங்கரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தின் ஈரோட்டில் துணிகள் வாங்கி, ஜெய்பூரில், 'பிளாக் பிரின்டிங்'கிற்கு அனுப்பி, அதனை பெங்களூரில் விற்பனை செய்கிறேன். பிளாக் பிரின்டிங் என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. ஒரு துணியை தயாரிக்க மூன்று நாட்களாகும்.
கொரோனா இறுதி கட்டத்தில், சில தொழிற்சாலைகள் என் யோசனைக்கு வாய்ப்பு அளித்தன. இதன் மூலம், ஏழு வகையான டிசைனில், தலா ஐந்து என 35 மேஜை துணிகள் தயாரிக்கப்பட்டது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் சில நண்பர்களிடம் விளக்கினேன். ஒரு மணி நேரத்துக்குள் 35 துணிகளும் விற்று தீர்ந்து விட்டன.
தற்போது எங்கள் நிறுவனத்தில் ஏழு பெண்கள் பணியாற்றுகிறோம். ஒவ்வொரு பெண்களின் கீழ், 70 கலைஞர்கள், மேஜை துணியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேஜை துணிகள் மட்டுமல்ல, டேபிள் பேட்கள், குஷன் உரைகள், கிப்ட் பைகள், சூடான பாத்திரங்களை பிடித்து எடுக்கும் துணிகளும் தயாரிக்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு எங்களின் https://theyardhouse.in என்ற இணையதளத்திலும், 70197 43156, 96631 67763 என்ற மொபைல் போனிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -