ADDED : ஜூன் 08, 2025 10:20 PM

சில குறிப்பிட்ட வயதில் பெண்களின் எலும்புகள், ஹார்மோன் மாற்றங்கள், மரபியல், வாழ்க்கை முறைகளால் பலவீனமாகும். ஆனால் பெங்களூரை சேர்ந்த 68 வயது மூதாட்டி, தன் மகளின் உத்வேகத்தால், நாட்டின் இமய மலையின் 'பேஸ் கேம்ப்', தென்னாப்பிரிக்காவில் உள்ள பங்கி ஜம்ப், நியூசிலாந்தில் ஸ்கை டைவிங், ஸ்கூபா டைவ் என, பல சாதனைகள் படைத்து வருகிறார்.
பெங்களூரை சேர்ந்தவர் புஷ்பா, 68. வழக்கமாக பல பெண்கள், 50 வயதுக்கு மேல், எலும்பு பலவீனமாகும்போது, வேலை செய்வதில் சிரமத்தை சந்திப்பர். ஆனால், புஷ்பாவுக்கோ, 50 வயதுக்கு மேல் தான், 'முழுமையான வாழ்க்கையை வாழ வேண்டும்' என்ற எண்ணம் தோன்றி உள்ளது.
சாகசம்
இந்த வயதில் பெரும்பாலோர், ஆபத்தை விட அமைதியான வாழ்க்கையை தேர்ந்தெடுப்பர். ஆனால் புஷ்பா, நியூசிலாந்தில் ஸ்கை டைவிங்கில் ஈடுபட்டார். உலகில் மிகவும் உயரமான தென்னப்பாரிக்காவிலும், ஜிம்பாபே, ஜாம்பியாவில் உள்ள பள்ளத்தாக்குகளிலும் பங்கி ஜம்ப் செய்துள்ளார்.
இதுகுறித்து புஷ்பா கூறியதாவது:
வாழ்க்கையை முழுமையாக வாழவும், ஒவ்வொரு வாய்ப்பையும் வளருவதற்காக பயன்படுத்தவும் விரும்பினேன். தற்போதைய இந்த வாழ்க்கைக்கு உத்வேகம் அளித்தது என் மகள் சுமா தான். 60 வயதில் மலையேற்றம் செய்ய ஊக்குவித்தார். முதலில் சிறிய மலைகளில் சர்வ சாதாரணமாக ஏறுவதை பார்த்த மகள், உயரமான மலைகளில் ஏற பரிந்துரைத்தார்.
இதற்காக, முதலில் பெங்களூரு அருகில் உள்ள திமனகிண்டி, கனகபுரா, வானந்திமாரி போன்ற சிறு மலைகளில் ஏறி பயிற்சி பெற்றேன். பின் இமய மலையின் 18,000 அடி உயரத்தில் உள்ள 'பேஸ் கேம்ப்' வரை ஏறினேன். இவ்வாறு நாட்டின் பல மலைகளில் 49 முறை மலையேறி உள்ளேன்.
மலையேற்றத்தில் நானும், மகளும் ஒன்றாகவே ஏறுகிறோம். ஏறும்போது பேசியவாறே மலை உச்சியை அடைந்து விடுவோம்.சிறு வயதில் இருந்தே, எதையும் விட்டு கொடுக்கவில்லை. ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும், நான் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டே இருப்பேன். இதனால் இன்றும் எனக்கு இவ்வளவு மன உறுதி இருக்கிறது.
ஆரோக்கிய உணவு
உடல் ஆரோக்கியத்துக்காக ஜிம்மிற்கு சென்றதில்லை. பல ஆண்டுகளாக எளிய, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறேன். இதனால் எனக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்னைகள் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரது மகள் சுபா கூறியதாவது:
என் தாய் தினமும் அதிகாலை 3:15 முதல் 5:30 மணி வரைக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பார். தியானத்துடன் அன்றைய தினத்தை துவங்குவார். பின், காலையில் தோட்டத்தில் உள்ள பறவைகளுக்கு உணவளிப்பார்.
ஒழுக்கம்
வீட்டு வேலைகளை அவரே செய்வார். பிரார்த்தனை செய்ய நேரம் ஒதுக்குகிறார். அவருடைய உணவு வகைகள் மிகவும் சிறிது. காய்கறிகள், கீரைகள், பழங்கள், ஒரு பல் பூண்டு, அரிசி. மூன்று வேளையும் சாப்பிடாமல் உறங்குவதில்லை. அவர், திண்பண்டங்கள் சாப்பிடுவதை பார்க்க முடியாது. இரவு 10:30 மணிக்குள் உறங்கிவிடுவார்.
அவரின் மன நலனும், ஒழுக்கமும் தான், இந்த வயதிலும் சாகச விளையாட்டுகள், மலையேற்றத்தில் ஈடுபட வைக்கிறது. நாங்கள் இருவரும் மலையேற்றம் செய்யும் போது, ஒரு இடத்தில் கூட அவர் சோர்ந்து நின்றதில்லை.
மலையேற துவங்கினால், சரசரவென ஏறிவிடுவார். எங்களுடன் வருபவர்கள், மலையேற்ற வழிகாட்டியும் கூட ஆச்சரியமடைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புஷ்பாவின் சாதனையை பாராட்டி, 2024ம் ஆண்டு 'பெண்களுக்கான வைசிய லைம்லைட் விருது' என்ற அமைப்பு, அவருக்கு விருது வழங்கி, '2024ம் ஆண்டுக்கான மலையேற்ற வீரர்' என்று கவுரவித்ததது குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -