ADDED : ஜூன் 19, 2025 11:38 PM

குடகில் பிறந்த 16 வயது சிறுமி, சர்வதேச அளவில் நீச்சல் போட்டியில் சாதனை படைத்து வருகிறார்.
குடகு மாவட்டம், மடிகேரியை சேர்ந்தவர் மதேயண்டா பூவன்னா. தொழிலதிபராக உள்ளார். இவரது மனைவி காயத்ரி, ஆசிரியை.
இவர்களின் மகள் மதேயண்டா ஆர்னா பூவன்னா, 16. சிறு வயதில் இருந்தே துருதுருவென்று இருப்பார்.
சிறப்பான பயிற்சி
குடகுவின் மடிகேரியில் உள்ள குடகு வித்யாலயா, தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் சரோஜினி மதுசூதன் குசே பள்ளியில் படித்து வந்த அவர், பெங்களூரு ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தார்.
பெங்களூரில் உயர்நிலை பள்ளியில் சேரும் போது, நீச்சல் பயிற்சி எடுத்தார். விரைவில் அதில் தேர்ச்சி பெற்றார்.
அவருக்கு சிறப்பான பயிற்சி அளித்தால், நீச்சலில் சாதிக்கலாம் என்று பயிற்சியாளர் தெரிவித்து உள்ளார்.
மகளின் எதிர்காலத்துக்காக, காயத்ரி, ஆசிரியை பணியை ராஜினாமா செய்தார். மகளுக்கு மேலும் பயிற்சி பெறும் வகையில், தமிழகம் சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாசிரமம் பள்ளியில் ஆர்னா பூவன்னா சேர்ந்தார்.
அங்கு அவருக்கு பயிற்சியாளர் தமிழ்வாணன், ஆர்னாவின் நீச்சலுக்கு ஏணியாக அமைந்தார்.
மூன்று தங்கம்
கடந்த 2025 பிப்., 6 முதல் 9ம் தேதி வரை, தாய்லாந்தின் பாங்காக்கில் ஐந்தாவது ஆசிய ஓபன் பள்ளியில் நீச்சல் போட்டி நடந்தது.
இதில், இந்தியா, ஹாங்காங், ஜப்பான், இந்தோனேசியா, கசகஸ்தான், மலேசியா, மால்தீவ்ஸ், மங்கோலியா, மியான்மர், ரஷ்யா, இலங்கை, வியட்நாம், அமெரிக்கா உட்பட 18 நாடுகளை சேர்ந்த 1,150 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற ஆர்னா, மூன்று தங்கம், 2 சில்வர், ஒரு வெண்கலம் பெற்று, நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
இதன்பின், கடந்த மாதம் டாமன் டையூவில் நடந்த 10 கி.மீ., தொலைவு கேலோ இந்தியா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இவர், வெள்ளிப்பதக்கம் பெற்று, மாநிலத்துக்கு பெருமை சேர்த்தார்.
சர்வதேச அளவில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் எனவும் விரும்புகிறார்
- நமது நிருபர் -.