ADDED : ஜூன் 13, 2026 10:51 PM

- நமது நிருபர் - வேகமான வாழ்க்கை, மொபைல் போன், சமூக ஊடகங்களின் கவர்ச்சிக்கு மத்தியில், பன்ட்வாலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், பயணியரிடம் வாசிப்பு பழக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க, தனது ஆட்டோவையே, குட்டி நுாலகமாக மாற்றி உள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வாலின் அஜ்ஜிபெட்டுவை சேர்ந்தவர் சுஷாஜ். தனது ஆட்டோவை குட்டி நுாலகமாக மாற்றி உள்ளார். இந்த ஆட்டோவில் சிறுவர் கதை புத்தகங்கள், நாவல்கள், தேச பக்தி பாடல்களின் தொகுப்புகள், பொது அறிவு படைப்புகள், சிந்தனையாளர்களின் எழுச்சியூட்டும் எழுத்துகள் உட்பட பல புத்தகங்கள் உள்ளன.
பயணியர், தங்கள் பயணத்தின் போது இந்த புத்தகத்தை படிக்கலாம். அந்த புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து சென்று படிக்க விரும்பினாலும் கூட, தாராளமாக எடுத்து சென்று, படித்து விட்டு, அவருக்கு போன் செய்தால், வந்து வாங்கிக் கொள்கிறார்.
ஆட்டோவில் புத்தகங்கள் மட்டுமின்றி, பயணியரின் வசதிக்காக தினசரி நாளிதழ்கள், முதலுதவி பெட்டி, குடிநீர், மொபைல் போன் சார்ஜர், துாய்மை மற்றும் சமூக பொறுப்புணர்வுக்காக, குப்பை போடுவதற்கான சிறிய தொட்டியும் உள்ளன.
புத்தகங்கள் மட்டுமின்றி, வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தும் பழமொழிகள், பொன் மொழிகள், ஊக்கம் அளிக்கும் செய்திகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. ஆட்டோ ஓட்டுநராக மட்டுமின்றி பள்ளி, பஞ்சாயத்து கட்டடங்களில் உட்பட பல இடங்களில் சுவர் ஓவியம் வரைதல், உணவு வழங்குதல் என பல தொழில்கள் செய்து வருகிறார்.
திரையுலக தொடர்பு
கன்னட திரையுலகினருடன் தொடர்பிலும் இருக்கிறார். சில படங்களில் கலை இயக்குநர்களுக்கு உதவியாளராக பணியாற்றி உள்ளார். கலை, சமூக சிந்தனையில் அவருக்கு இருந்த ஆர்வமே, இந்த புதுமையான கருத்துக்கு உத்வேகம் அளிப்பதாக கூறுகிறார்.
வரும் நாட்களில் பயணியருக்கு குளிர்பானங்கள், குழந்தைகளுக்கான சாக்லேட்களையும் வைக்க முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
எனக்கு சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் உள்ளது. புத்தக கண்காட்சி அல்லது வேறு எங்கு சென்றாலும், புத்தகம் வாங்கும் பழக்கத்தை வளர்த்து கொண்டேன்.
நான் படிக்கும் புத்தகங்கள் வீட்டிலேயே இருந்தால், சிலருக்கே மட்டுமே பயன் கிடைக்கும். ஆனால், அவற்றை நான் ஒரு ஆட்டோவில் வைத்தால், தினமும் ஆட்டோவில் பயணியர் அவற்றை பார்த்து படிப்பர். புத்தகங்கள் மூலம் அறிவை பகிர்ந்து கொள்ளவும், வாசிப்பு பழக்கத்தை மேலும் வளர்ப்பதை நோக்கமாக கொண்டு இந்த குட்டி நுாலகத்தை துவங்கினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
