PUBLISHED ON : ஜூன் 14, 2026

கிளறப்பட்ட குப்பை கிடங்கு
பள்ளி நேரம் முடிந்ததும் தாய் வருவதற்கு முன் தானே வீட்டிற்கு கிளம்பிச் செல்லும் பால்வாடி குழந்தை, வழியை தவற விட்டு அழுது கரைந்து சுற்றுவது போல், எங்கெங்கோ தாறுமாறாய் சுற்றும் பாடாவதி காட்சிகள்; மூக்கொழுக அழுது கரைவதோ படம் பார்த்துக் கொண்டிருக்கும் நாம்!
பெயர் இல்லாத ஊராம்; இதனால், அடையாளம் அற்ற மனிதர்களாம்; ஊரை புயல் வேகத்தில் கடந்து செல்லும் ரயிலை, சிவப்பு கொடி ஆட்டி நிறுத்தி ஊருக்கு அடையாளம் பெற விரும்பும் ஓர் அரை பைத்தியத்தின் ஆசை நிறைவேற்ற, அவ்வழியில் பயணப்படும் அவ்வூரின் முழு பைத்தி... இல்லை... இல்லை... பெத்தி!
கிரிக்கெட் ஆடி, வெல்லப்பாகு காய்ச்சி, மல்யுத்த வீரனாகி, தானே காலை அறுத்து மாற்றுத் திறனாளியாகி, பின் ஓட்டப் பந்தய வீரனாகி, முன்சொன்ன ரயில் தன் ஊரில் நின்று செல்ல காரணமாகும் நாயகனாக ராம் சரண்; ஒரு காட்சி, இரு காட்சி என்றல்லாது அறிமுகமான வினாடியில் இருந்து கடைசி காட்சி வரை, தான் தோன்றும் போதெல்லாம் நம் முகத்தில் முரட்டு குத்து குத்துகிறார்; 'ஆஸ்கர்' விருது தகுதிக்கும் அப்பாற்பட்ட அசுர நடிப்பு!
நாம் உணர்வற்றுப் போகும் நிலையில் நம்மை மீட்க, தங்கமாய் மின்னும் அங்கம் பொங்கும் ஜான்வியின் தரிசனம்; ராம் சரணை ஜான்வி மணம் முடிக்கும்விதம், மே 4க்கு பிறகு நாம் பார்க்கும் நகைச்சுவைகளை மிஞ்சும் ரகம்!
'இந்த காட்சி என்ன சொல்ல வருகிறது' என்று எந்த காட்சியில் சிந்தித்தாலும் ஒரு கொத்து மயிர் இழப்பு நிச்சயம்; சொட்டை தலைகளுக்கோ மண்டை ஓட்டில் விரிசல் சத்தியம்! க்ளைமாக்ஸில் ராம் சரண் ஏதேதோ பேசுகிறார்; அவர் முடித்தபின், 'ப்ளாஷ்பேக்' ஆக விரியும் மொத்த கதைக்கும் காரண கர்த்தாவான நபர் பேசுகிறார்; முதலாவது... 'நன்றியுள்ள' கடி; இரண்டாவது... 'எம' கடி.
'திரைப்படம்' என்பதை இதுவரை அறியாதவனுக்கும் 'கொலை வெறி' ஏற்றும் படைப்பு.
ஆக...
இதனை 'சிறந்த படம்' என்பவன் பூமாதேவியின் முன்னோர்களது மூத்த மகன்
