PUBLISHED ON : ஜூன் 14, 2026

'கனவுக்கு உண்மையாக இருந்தால் சாதனைகள் தானாக நிகழ்ந்து விடும்' எனும் உண்மையின் உருவமாக நிற்கும் இவர், கம்பு ஊன்றி தாண்டுதல் வீராங்கனை; 'பெண்கள் பிரிவில் 4.23 மீட்டர் உயரம் தாண்டியவர்' என்கிற தேசிய சாதனை இவர் வசம்!
சாதனைக்கு காரணமான தன் 10 ஆண்டுகால அனுபவங்களை பகிர்கிறார் தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் பரணிகா.
பத்துக்கு பத்து
தோராயமா பத்து வினாடிகள்ல பத்து நுட்பங்கள்ல உடல் ஆற்றலை வெளிப்படுத்துறதுதான் இந்த விளையாட்டு. 30 மீட்டர் நீள ஓடுதளம்; இதுல கையில கம்போட ஓடிவந்து, அந்த வேகத்தை கம்புக்கு மாற்றி, கம்பை ஊன்றி உயரம் போய், நாணலா உடல் வளைச்சு, உடல் தரை தொடுற வரைக்கும் ஒருங் கிணைப்பு துல்லியமா நடக்கணும். இதுக்கு, குறைஞ்சது மூணு வருஷ பயிற்சியாவது தேவைப்படும்.
மயிலாடுதுறை, சேத்திரபால புரம் கிராமத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பரணிகாவுக்கு, துவக்கத்தில் 'டிரிபிள் ஜம்ப்' மீதே ஆர்வம். இளங்கலை பயில 2016ல் சென்னைக்கு வந்த 19ம் வயதில் தான் இவ்விளையாட்டு இவருக்கு அறிமுகம்.
அழையா விருந்தாளிகள் பற்றி...
* காயங்கள் - என்னை சந்திக் கையில், 'இதோட நீ காலி'ன்னு சிரிக்கும்; 'போ... போ... அடுத்த தடவை பார்க்கலாம்'னு நான் 'டாட்டா' சொல்லிடுறேன்!
* தோல்விகள் - ஆரம்ப காலங்கள்ல துாக்கமில்லா இரவுகளுக்கு காரணமாச்சு; இப்போ, என் தவறுகளை சுட்டிக்காட்டுற ஆசிரியர் !
சிநேகமான சவால்கள்
இந்த விளையாட்டுல ஆக் ரோஷம் வெளிப்பட்டா தசைகள்ல காயம் உண்டாயிரும். தசை வலி இருக்குறப்போ உணர்வுகளை நேர்மறையா வைச்சுக்கிறது ரொம்ப பெரிய சவால்! இந்த விளையாட்டுக்கு, 'ஜிம்னாஸ்டிக்' பயிற்சி ரொம்ப முக்கியம். எனக்கான பயிற்சிகளை ஒடிசாவுல நான் எடுத்துக்குறேன்.
பிப்ரவரி 2019ல், பயிற்சியின் போது இடதுகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக இவருக்கு 'ஏ.சி.எல்., புனரமைப்பு' எனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இத்தகைய காயங்களில் இருந்து மீண்டு பயிற்சி துவக்க பத்து மாதங்கள் ஆகும் எனும் நிலையில், ஆறாவது மாதத்திலேயே தங்கம் வென்றிருக்கிறார் பரணிகா.
உங்கள் விளையாட்டிற்கு கம்பு; வாழ்க்கைக்கு...?
இந்த விளையாட்டுதான் என் வாழ்க்கை. இதுக்காக, என்னை அணுஅணுவா செதுக்குற என் பயிற்சியாளர் மில்பர் ரஸல்; பெற்றோர் இளங்கோவன் - ராணி; கணவர் கார்த்திக் பாஸ்கரன்... இவங்கதான் என் வாழ்க்கையின் ஆதாரம்.
போட்டிக்கு முன்...?
தியானம் செய்வேன்.
கில்லியின் கனவு
பெண்கள் பிரிவில், '5.06 மீட்டர் உயரம்' எனும் உலக சாதனையை தாண்ட வேண்டும்!
