
தன் மகனை தனக்கு 'போஸ்டர்' ஒட்ட அனுப்பாத நடிகனையும், 'வாரிசு வளர்ச்சியே முக்கியம்' என வாழும் அரசியல்வாதியையும், 'தலைவன்' எனக் கொண்டாடி வாழ்வை தரிசாக்கும் தமிழக இளைஞர்கள் மத்தியில்...
சென்னை குருநானக் கல்லுாரியின் இம்மாணவர்கள் தனித்துவமானவர்கள்!
'உலகமே ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டிருந்த நேரம். அந்த சூழலில் பெரும் பனி பொழியும் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் யானைப் படையை வழிநடத்தி ரோமானியர்களுக்கு எதிரான போரில் ஜெயித்தவன் கார்தஜினிய படைத்தலைவன் ஹானிபல் பார்கா. அவனது போர் தந்திரங்கள் படிக்க படிக்க சலிக்காதவை! பார்கா... உன் வழியில் நான்!'
- சு.அர்ஜுன், 'விஸ்காம்' முதல் ஆண்டு.
'அவரது வீடு சென்னை தண்டையார்பேட்டையில் இருக்கிறது; வீடு முழுக்க ஊனமுற்ற, வயதான நாய்கள். தன் ஓய்வூதியத்தில் அவைகளை பராமரிக்கிறார். காரணம் கேட்டால், 'வயதாகிவிட்டது என ஒதுக்கப்படுகையில் எழும் வலியின் அவஸ்தை உணர்ந்தவன் நான்' என்று வடிகிறது கண்ணீர். சக மனிதனுக்கான சிறு உதவிகளைக் கூட ஊரறிய வைக்கும் இன்றைய உலகில் நான் பார்த்து ரசிக்கும் ஹீரோ அவர்!'
- ம.ஜெய்மது, 'விஸ்காம்' 2ம் ஆண்டு.