PUBLISHED ON : ஜூன் 22, 2025

அன்னையாகப் போகிறவள் அரசியல் ஊட்டுகிறாள்!
'சட்டத்தின் ஆட்சி என்பது பெயரளவில் தான் உள்ளது'ன்னு உயர் நீதிமன்ற நீதிபதி சொல்லி வருத்தப்படுற அளவுக்குதான் இங்கே சூழல் இருக்கு!
'ஆமாடாம்மா... இங்கே நம்ம எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அறிக்கை விடுற அளவுக்கு களத்துல இறங்குறதில்லை! சமீபத்துல கூட, தாம்பரம் அரசு சேவை இல்லத்துல 13 வயசு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தப்போ, 'முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்'னு அறிக்கையில கொந்தளிச்சாரே தவிர, பெருசா எதுவும் செய்யலை!
'அவர் நினைச்சா செய்யலாம்; 1982ல எம்.ஜி.ஆர்., முதல்வரா இருந்தப்போ, எதிர்க்கட்சி தலைவரா கருணாநிதி இப்படி செஞ்சிருக்கார்! திருச்செந்துார் கோவில் அதிகாரி சுப்பிரமணியபிள்ளை மரணத்துக்கு நீதி கேட்டு மதுரையில இருந்து திருச்செந்துார் வரைக்கும் பாத யாத்திரை போனார்!
'பாத யாத்திரையை கைவிடச்சொல்லி முதல்வர் எம்.ஜி.ஆர்., வேண்டுகோள் வைக்கிற அளவுக்கு எதிர்க்கட்சி தலைவர் அன்னைக்கு வீரியமா செயல்பட்டார். ப்ப்ச்ச்ச்... இன்னைக்கு அப்படியான சூழல் இல்லை. அதனால, நீதான் உன்னை பத்திரமா பார்த்துக்கணும்!
'ம்ம்ம்... அப்புறம்... 'தீவிரவாதத்தை வேரறுக்க எங்க பிரதமர் தீவிரம் காட்டுறார்'னு பனாமா நாட்டுல பேசிட்டு வந்த காங்கிரஸ் எம்.பி., சசி தரூரை விட, பிரதமரைப் பற்றியே குறிப்பிடாம, 'இந்தியாவின் தேசியமொழி... வேற்றுமையில் ஒற்றுமை'ன்னு சொல்லிட்டு வந்த தி.மு.க., எம்.பி., கனிமொழிக்கு நீ கைதட்ட கத்துக்கணும்!
'பல மொழிகள் பேசப்படுற இந்தியாவுல தேசிய மொழி கிடையாதுன்னு, 'கூகுள்' பண்ணி தெரிஞ்சிருக்க வேண்டியதை கனிமொழிகிட்டே ஸ்பெயின் நிருபர் கேட்டது, 'தற்செயல் நிகழ்வு'ன்னு நீ நம்பணும். அப்போதான், நீயும் 'மூளைக்காரி' ஆக முடியும்!
'ஏன்னா... நானும், உங்கப்பாவும் அதை நம்பினோம்; நம்புறோம்; இனியும் நம்புவோம்!'