PUBLISHED ON : ஜூலை 06, 2025

செய்தி: கொள்ளை போன நகை; தவிக்கும் சிவகங்கை குடும்பம்!
அநீதி: 'கண்டறிய இயலவில்லை' - தமிழக காவல்துறை; 'இது ஏற்புடையதல்ல' - ஆறு ஆண்டுகளாகப் போராடும் பெண்!
அரசே... சிவகங்கை மாவட்டத்தில் உமது காவல் துறை மேற்கொண்ட சமீபத்திய ஆக்ரோஷத்திற்கு முற்றிலும் நேர்மாறானது எனது வழக்கு! கண்ணமங்கலபட்டி கிராமவாசியான நான் அகிலாண்டம்; சத்துணவு ஊழியர்.
செப்டம்பர் 9, 2019; பூட்டியிருந்த என் வீட்டில் பட்டப்பகலில் 28 பவுன் தங்க நகை, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது. வெளிநாட்டில் கூலியாக என் கணவர் சம்பாதித்து சேர்த்தவை அவை!
சிங்கம்புணரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. மூன்றே மாதம்... 'எந்த துப்பும் கிடைக்கவில்லை' என்று காவல் துறை கைவிரிக்க, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தேன். 'மூன்று மாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தேன்.
'உள்துறை செயலர் உரிய முடிவெடுக்க வேண்டும்' என, 2023 ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜனவரி 21ம் தேதி, 'துப்பு கிடைத்தால் புலன் விசாரணை செய்யப்படும்' என்று உங்கள் அரசு பதில் நீட்டி விட்டது. 'ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக தமிழக காவல்துறை செயல்படுகிறது' என தாங்கள் பெருமை பேசிக் கொள்வது எந்த அடிப்படையில் அரசே?