PUBLISHED ON : ஜூலை 06, 2025

தலைப்பை போல் அல்லாமல் சின்ன கதை!
'சொந்த வீடு' கனவுக்காக பல தியாகங்களைச் செய்யும் அப்பா, அம்மா, மகன் மற்றும் மகள் உள்ள நடுத்தர குடும்பம். 'சொந்த வீடு' கனவுக்கான இவர்களின் முயற்சிகளுக்கு இடையில் நிகழ்பவை... ரசிகர்கள் தங்களது வீட்டிற்கு எடுத்து செல்லத்தக்கவை!
'அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா எதிர்காலம் நல்லாயிருக்கும் - 'அடிச்சாதான் வன்முறை'ன்னு கிடையாது - 'வீடு'ங்கிறது மரியாதை!' - இவ்வசனங்களுக்கு காரணமாக இருக்கும் சூழ்நிலைகள் இக்கதையை அர்த்தம் நிறைந்தவையாக மாற்றுகின்றன!
'தேர்வில் மதிப்பெண் குறைந்த மகனை தந்தை தேற்றுவது, நீண்டகாலமாக மகனிடம் பேசாமல் இருந்துவிட்டு மீண்டும் பேசுவது' என பாசம் பிழிவதற்காக எழுதப்படும் காட்சிகள் இதிலும் உண்டு என்றாலும், உணர்ச்சிகளை பிழியாமல் கடந்து சென்றவிதம் நன்று!
ஆண் பிள்ளையை தனியார் பள்ளியிலும், பெண் பிள்ளையை அரசுப் பள்ளியிலும் சேர்ப்பது; வசதியை முன்நிறுத்தி திருமணத்தை தீர்மானிப்பது என நடுத்தர குடும்பங்களின் தவறுகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன. 'தியாகம்' என்கிற வார்த்தையை அதீதமாக புனிதப்படுத்தி நிகழ்காலத்தை அனுபவிக்கத் தவறுவதும் விளக்கப்பட்டிருக்கிறது!
உழைத்து தேய்ந்த குடும்பத் தலைவருக்கான மெலிந்த தேகம் இல்லாததால் சரத்குமாரின் நடிப்பில் திருப்தியில்லை. குறைவாகவும் பொறுப்பாகவும் பேசும் குடும்பத்தலைவியாய் தேவயானி கச்சிதம். அண்ணன் தங்கையாக சித்தார்த் - மீதா ரகுநாத் பங்களிப்பில் நிறைவு.
நடுத்தர குடும்பத்தின் 'சொந்த வீடு' கனவை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் தங்களின் அன்றாடங்களை, வாழ்க்கையை அணுகும் விதம் பற்றி சலிப்பு ஏற்படாவண்ணம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.
ஆக...
ஒரே அமர்வில் ஒரு சிறுகதை வாசித்து முடித்த உணர்வு!