PUBLISHED ON : ஜூன் 01, 2025

காதலுக்கு அபிஷேகம் செய்யும் அபிலாஷம்!
காதல் கணவனை இழந்து குழந்தையோடு வந்து நிற்கும் தங்கைக்கு, அவள் அறியாது அவளை மனதில் சுமந்திருக்கும் அவளது பள்ளித்தோழனை கணவனாக்க முயற்சிக்கிறான் அண்ணன். சாட்சியாக, அவளது குழந்தை. ரயில் நிலையத்திற்கு அந்த காதலன் வருவதில் துவங்குகிறது இந்த க்ளைமாக்ஸ்.
ரயில் நிலையத்திற்குள் மும்பை ரயில் நுழைகையில், 'அய்யோ...அதற்குள்ளாகவா...' என்றவாறு அண்ணனின் முகத்தில் மனம் காட்டும் வருத்தம், பிஞ்சு பாதங்கள் நெஞ்சில் மிதிக்கையில் உண்டாக்கும் மெல்லுணர்வை மீட்டி விடுகிறது!
புல்லாங்குழல் பின்னணி இசைக்க... தான் அடைகாத்து வரும் காதலை அவளிடம் சொல்லும்போது சைஜு குரூப் வெளிப்படுத்தும் பதற்றத்தில், அன்றைய ரஜினி போல் ஸ்டைலாக முன்கேசம் கோதிக் கொள்கிறது காதல்!
'காதல் மட்டுமல்ல... எந்த உணர்வுமே பழக்கமாகி விட்டால் அது நாம் வாழ்வதற்கான முதன்மை காரணமாகி விடும்' என்று காதலை முன்னிறுத்தி, ரயில் பின்னணியில் விரியும் காட்சி 'லைலா - மஜ்னு' காதலை நினைவூட்டிக் கொள்ள ஒரு வாய்ப்பு தருகிறது!
பலவித முகபாவங்களால் காதலுக்கு தோழன் போல் நிற்கும் அந்த அண்ணனின்... அந்த மதிப்பிற்குரிய தாய்மாமனின் கைகளில் இருந்து விடைபெற்று, மஜ்னுவின் காதலை ஒருவித தவிப்போடு தவிர்த்து ரயிலேறும் லைலாவுடன் ஒட்டிக் கொள்ளும் குழந்தை... சைஜுவிடம் விடைபெறும் வார்த்தைகளில் 'எனக்கு மரணம் கிடையாது' என்கிறது காதல்!
காதலுக்கு மரியாதை தரும் அண்ணனாக பினு பாப்பு; இந்த காதலுக்கு காரணமாகும் தேவதையாக தன்வி ராம்; ஆழ்ந்து மூச்சிழுத்து நுரையீரல் முழுக்க காதல் நிரப்பச் சொல்கிறது ஷம்சு சேபாவின் இயக்கம். இந்த 'க்ளைமாக்ஸ்' காதல் வாசனைக்கான முன்தயாரிப்புகளுக்காக, ஒன்றே முக்கால் மணி நேர அபிலாஷம்.
ஆக...
இளையராஜாவால் தீண்டப்பட்ட இசைக்கருவியின் காதல் மொழிக்கு இணையாய் ஓர் அற்புதம்!