ADDED : ஜூன் 08, 2024 09:17 AM

சிவகங்கை மாவட்டம், நேரு பஜாரை சுற்றியுள்ள தெருநாய்களுக்கு உணவளிப்பது, வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது என பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த உதயக்குமார், அவரின் மகள் அபிநயாவிடம் பேசினோம். ஐந்தறிவு ஜீவன்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது குறித்து நம்மிடம் பகிர்ந்தவை.
ரோட்டில் அடிபட்டு காயங்களோடு இருக்கும் தெருநாய்களை கண்டாலே உள்ளம் பதைபதைக்கும். இவைகளுக்கு சிகிச்சை அளிப்பது பசியோடு காத்திருக்கும் தெருநாய்களுக்கு உணவளிப்பதை, ஜீவகாருண்ய கடமையாக கருதி பல ஆண்டுகளாக மேற்கொள்கிறேன். இதற்கு ஆகும் செலவை கணக்கில் கொள்வதில்லை. இதனால், என்னை எங்கு பார்த்தாலும் வாலை ஆட்டிக்காட்டி நன்றியை தெரிவிக்கும்.
இதே உணர்வு என் மகள் அபிநயாவிடமும் இருக்கிறது. எங்கள் வீட்டில் எப்போதும் நாய்கள் இருக்கும். வயதாகி இறந்தால், வேறு பப்பிகள் வீட்டிற்குள் வந்து, எங்களின் மன இறுக்கத்தை மாற்றிவிடுவார்கள். தற்போது, குட்டி, ஜிம்மி என இரு பப்பிகளை வளர்க்கிறோம். குடும்ப உறுப்பினர்களாகவே அவை மாறிவிடுவதால் எங்கு சென்றாலும், உடன் வருவார்கள்.
வெளியூர்களுக்கு காரில் சென்றால் அவைகளுக்கு தனி சீட் ஒதுக்கிவிடுவோம். குட்டி, ஜிம்மிக்கு, சிக்கன் ரொம்ப பிடிக்கும். இவைகளுடன் நேரத்தை செலவிடுவதால் மன அழுத்தம், கவலை நொடியில் பறந்துவிடும். எப்போதும் புத்துணர்வுடன் இருப்பது போன்ற உணர்வை தருவார்கள். நம்மை சார்ந்து வாழும் உயிரினங்களை காக்க வேண்டியது, நம் கடமை அல்லவா என, அப்பாவும், மகளும் கோரஸாக சொல்லி முடித்தனர்.