ADDED : செப் 15, 2026 02:35 PM

''வ ரவர இந்த யூடியூபர்ஸ் 'அட்ராசிட்டி' தாங்க முடியல,'' என ஆரம்பித்த சித்ரா, ''திருப்பூர் சிட்டியில சமூக ஆர்வலர், ரிப்போர்ட்டர்ஸ்னு சொல்லீட்டு சுத்தி கொண்டுள்ள ஒருடுபாக்கூர் கும்பல்களில் ஒன்று, பிரைவேட் ஹாஸ்பிடலில், விதிமீறல் நடப்பதாக கூறி, நிர்வாகத்திடம் பேரம் பேசினர். எங்களை கவனிக்கவில்லை என்றால், யூடியூப், பேஸ்புக்கில், ஹாஸ்பிடலை பத்தி தாறுமாறா செய்தி போடுவோம்னு மிரட்டினர்,''
''நாங்க எந்த தப்பு செய்யல. எதற்கு பணம் தரோணும்,' என ஹாஸ்பிடலில் 'நோ' சொல்லி விட்டனர். இதனால, ஹாஸ்பிடல் பத்தி, அவதுாறாக செய்திகளை பகிர்ந்தனர். கோபமுற்ற ஹாஸ்பிடல்காரங்க, போலீசில கம்ப்ளையன்ட் பண்ணிட்டாங்க. இப்போது அந்த 'டூபாக்கூர்'கள் மீது எப்.ஐ.ஆர். ரெடியாயிட்டு இருக்குது,'' என்றாள்.
''கரெக்ட் தாங்க்கா...'' என்ற மித்ரா, ''தி.மு.க.காரங்களுக்கு இன்னும் விசுவாசம் காட்டுகிற ஒற்றர்படை போலீசார் யார், யாருன்னு சென்னையில் இருந்து வந்த ைஹயர் அபிஷியல்ஸ் லிஸ்ட் எடுத்துட்டு போயிட்டாங்களாம். அதுல சிக்குபவர்களை, டிவிஷன் விட்டு டிவிஷனுக்து துாக்கியடிக்க போறாங்களாம். இது தெரிஞ்சதால, பலரும் கலக்கத்தில உள்ளனராம்,''
''மித்து, சவுத் டிராபிக்கில ஒரு ஆபீசர் தன்னை நல்லவர் போல் காட்டிகிட்டாலும், கை சுத்தமில்லையாம். தேர்தல் சமயத்தில இங்க வந்த அவருக்கு மறுபடியும் அதே இடத்துக்கே போக சொல்லி ஆர்டர் வந்து விட்டது. இங்கே கலெக் ஷன் அள்ளுவதால், டாலர் சிட்டியிலயே இருந்து விடலாம்னு, தெரிஞ்ச ஆபீசர வச்சு, காய் நகர்த்திட்டு இருக்கிறாராம்,''
''புட் சேப்டி ஆபீசர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் கேன்டீன்ல ஆய்வு நடத்தியதில, உணவை பார்த்து 'ஷாக்' ஆயிட்டாராம். கவர்மென்ட் சைடு நல்ல சப்போர்ட் இருக்கறப்ப, ஏன் இப்படி செய்கிறீர்கள் என சத்தம் போட்ட ஆபீசர், நெக்ஸ்ட் டைம் இப்டியிருந்தா கடும் விளைவை சந்திக்கணும்னு எச்சரிக்கை செய்தாராம்க்கா...''
''அதே மாதிரி, தாராபுரம் இடைத்தேர்தல காரணம் காட்டி, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிய ஒத்தி வச்சிட்டாங்க. இதப்பத்தி முன்கூட்டியே பி.ஆர்.ஓ., ஆபீசில இருந்து விளையாட்டுத்துறைக்கு தகவல் சொல்லவேயில்லையாம். இதனால, போட்டிக்கு வரும் ஸ்டூடண்ட்ஸ்க்கு கொடுக்க, 100 சாப்பாடு வந்திருச்சாம். வேறு யாருக்காச்சும் கொடுக்காம, குப்பையில சாப்பாட்டை கொட்டிட்டாங்களாம்,''
''மாவட்ட வருவாய்த்துறையில் ஏழு பேரை டிரான்ஸ்பர் செஞ்சாங்க. அஞ்சு நாள்ல என்ன மாயம் நடந்துச்சோ தெரியல. கலெக்டரின் பி.ஏ.வா நியமிக்கப்பட்டவரும், மறுபடியும் பழைய போஸ்டிங்கிலும், அங்கிருந்த ஒருத்தரை துாக்கி, பல்லடத்துக்கு தாசில்தாராக மாற்றிவிட்டனர். 'வளம் கொழிக்கும்' பொறுப்பில் இருந்தவர்கள் மீண்டும் அதேயிடத்துக்கு வருவதற்கு பல்வேறு 'தாஜா' வேலைகளை செய்துள்ளதாக, சக அலுவலர்களே பேசுகின்றனர். கண்ணதாசன் சொன்னது போல, 'வாங்கிப்பழகிய கை... போட்டுப் பழகிய பை,'' எனக்கூறி சித்ரா சிரித்தாள்.
''தாராபுரம் தொகுதியில இடைத்தேர்தல் நடக்கிறதால, விதிகளை மீறி கூட்டுறவு சங்க ஊழியர்களை டிரான்ஸ்பர் செஞ்சிட்டாங்களாம். ஏற்கனவே ரேஷன் கடைகள்ல முறைகேடுன்னு புகார் வர்ற நிலையில, பெண் ஊழியர் ரெண்டு பேர் குடுமிப்பிடி சண்டை போட்டாங்களாம். இப்போ, விதிகளை மீறி ஊழியர்கள் இடமாற்றம் நடந்தது விமர்சனத்தை ஏற்படுத்திருக்குங்க்கா...''
''மித்து, திருப்பூர் கோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் நியமன விவகாரம் துவக்கம் முதலே குழப்பம் தான். புதிய அரசு அமைந்தவுடன் ஒரு லிஸ்ட் போட்டாங்க. அத, பி.டி.ஜே. ரிஜெக்ட் பண்ணிட்டாரு. மறுபடியும் இன்னொரு லிஸ்ட் போட்டாங்க. அதன்படி அரசு வக்கீல்கள் பொறுப்பேற்றனர். இப்ப ரெண்டு நாள் முன்னாடி, சில மாற்றங்களுடன் செய்து இப்ப ஒரு ஜி.ஓ. வந்திருக்குது. ஆளும்கட்சி வி.ஐ.பி.கள் தலையீட்டால் இதுபோல் நடப்பதாகவும், கட்சி பாடுபாடின்றி மத்த கட்சிக்காரங்களுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளதாக வக்கீல்கள் மத்தியில் 'டாக்' உலா வருது,''
''கார்ப்ரேஷனில் விஐபி போஸ்டிங் காலியா இருக்கறதால, எந்த ஒரு வேலையும் ஜவ்வு தானாம். அதிலும், குப்பை பிரச்னை இன்னும் முடிஞ்சபாடில்ல. அதேமாதிரி, கார்ப்ரேஷனுக்கு டேக்ஸ் கலெக் ஷன் பண்ண சொன்னா, சிலர் தங்கள் பாக்கெட்டுக்குள்ள போட்டுக்கறாங்க. டேக்ஸ் பிக்சேஷனில் ஏகப்பட்ட தில்லுமுல்லு நடக்குதாம். யாரும் கண்டுக்காததால, டிபார்ட்மென்ட் ஆபீசர் ஒருத்தர் லகரங்களில் வாரிச்சுருட்டி, பையில போட்டுக்கிறாராம். புதிசா வந்திருக்கற கவர்மென்ட் லஞ்சமே இல்லைன்னு சொன்னதை திருப்பூரில் 'அமல்'படுத்த 'ராஜா'க்களுக்கு மனம் வரவில்லையோ...'' என்ற சித்ரா, பில்டர் காபியை மித்ராவுக்கு கொடுத்தாள்.
