/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டுமான ஒப்பந்ததாரருக்கு முன்பணம் கொடுப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
/
கட்டுமான ஒப்பந்ததாரருக்கு முன்பணம் கொடுப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
கட்டுமான ஒப்பந்ததாரருக்கு முன்பணம் கொடுப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
கட்டுமான ஒப்பந்ததாரருக்கு முன்பணம் கொடுப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ADDED : ஜூலை 27, 2024 08:00 AM

இன்றைய சூழலில் ஒருவர் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தால், ஒப்பந்ததாரரின் ஒத்துழைப்பு என்பது மிக அவசியமான ஒன்றாகியுள்ளது. இதில், உங்கள் வீட்டுக்கான ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் நிலையில் அவருடன் குறிப்பிட்ட அளவுக்கு நேரத்தை செலவிட்டு விரிவாக விவாதிக்க வேண்டும்.
புதிய வீடு குறித்த உங்கள் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், குடும்பத்தினரின் விருப்பங்கள், தேவைகள் ஆகிய விபரங்களை பொறுமையாக எடுத்துரைக்க வேண்டும். இதில் குறிப்பாக, புதிய வீட்டுக்கான உங்கள் நிதி ஒதுக்கீடு என்ன என்பதையும் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்த வேண்டும்.
கட்டுமான பணிக்கான பட்ஜெட் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆரம்ப நிலையில் தெளிவாக பேசி முடிவு செய்ய வேண்டும். இதில் கட்டுமான பணிகளை துவங்கும் நிலையில் முன்பணம் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட தொகை வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் எதிர்பார்ப்பார்கள்.
பொதுவாக, கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் என்றால் அதற்கான ஆட்களை அழைத்து வருதல், பொருட்களை வாங்குதல் போன்றவற்றுக்கான முன்பணம் கொடுப்பது அவசியம். ஆனால், கட்டுமான பணிகளை துவங்க ஒப்பந்ததாரருக்கு முன்பணம் கொடுக்கும் நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.
முதலில், கட்டுமான பணிக்கான மொத்த பட்ஜெட் என்ன என்பதை முடிவு செய்து, அதன் அடிப்படையில் கட்டுமான ஒப்பந்த ஆவணத்தை தயாரிக்க வேண்டும். அந்த ஒப்பந்த ஆவணத்தில், கட்டடம் தொடர்பான முழு விபரங்களையும் குறிப்பிட வேண்டும்.
அதில் கட்டுமான பணிக்கான பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களை குறிப்பிட்டு, மொத்த தொகை எந்தெந்த சமயங்களில் தவணை முறையில் வழங்கப்படும் என்பதை குறிப்பிட வேண்டும். இதில் மொத்த பட்ஜெட் தொகையில், குறைந்த பட்சம், 20 சதவீத தொகையை முன்பணமாக கட்டுமான ஒப்பந்ததாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய வீட்டுக்கான எந்த பணியும் துவங்கும் முன், 20 சதவீத தொகையை கொடுப்பதா என்ற அடிப்படையில் உரிமையாளருக்கு கேள்வி எழலாம். ஆனால், இன்றைய சூழலில், கட்டுமான பொருட்களை வாங்குதல், பணியாளர்களை அழைத்து வருதல் உள்ளிட்ட காரணங்களுக்கு, 20 சதவீத தொகை போதுமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
கட்டுமான பணிக்கான பட்ஜெட்டில், 20 சதவீத தொகையை முன்பணமாக கொடுக்கும் நிலையில் அதற்கான ரசீது போன்ற விஷயங்களை கேட்டு பெறுவது அவசியம். சில சமயங்களில், கட்டுமான ஒப்பந்ததாரருடன் பேசி, 10 சதவீத தொகையை முன்பணமாக பெற அவரை சம்மதிக்க வைக்கலாம். இதே போன்று அடுத்தடுத்த தவணை தொகை எந்த நிலையில் வழங்கப்படும் என்பதையும் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்த வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.