/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
'மேஸ்திரி வாயிலாக வீடு கட்டக்கூடாது'
/
'மேஸ்திரி வாயிலாக வீடு கட்டக்கூடாது'
ADDED : ஜூன் 13, 2025 10:11 PM

நாம் வீடு கட்டும்போது, எதிர்காலத்தில் மேலே தளம் எழுப்புவதற்கு வசதியாக விடப்பட்ட பில்லர் கம்பிகளின் மீது, துரு பிடிக்காமல் இருக்க பெயின்ட் அடிக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் பயன்படுத்தலாமா?
-சுபாஷ், சின்னவேடம்பட்டி.
மேலே தளம் எழுப்பப்பட்ட துாண் குறைந்தது, M20(1:1.5:3) தர கான்கிரீட்டால் கட்டப்பட்டு, மேலே நீர் தடுப்பு திரவம் கலந்த கலவையால் பூசப்பட வேண்டும். நீட்டப்பட்டுள்ள கம்பிகளில் துரு எதிர்ப்பு திரவப்பூச்சு பூசப்பட வேண்டும். பெயின்ட் அடிப்பதால் எந்த பயனும் இல்லை. இதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே உதவும். மீண்டும் பூச்சு பூச வேண்டும். கம்பிகளை மேலே நீட்டவும் வேண்டாம். துரு எதிர்ப்பு திரவமும் பூச வேண்டாம். மேலே இன்னொரு தளம் எடுக்கும்போது 'ஹில்டி டெக்னாலஜி' பயன்படுத்தி, எளிதில் கட்டலாம்.
நான் ஒரு சைட் சூப்பர்வைசர். நான் பணிபுரிந்த அனைத்து சைட்களிலும், ஒரு பொது பிரச்னை என்னவென்றால், கடைக்கால் தோண்டும் போது, 6.7 அடி ஆழத் திலேயே நிலத்தடி நீர் சுரந்து மேலே வந்துவிடுகிறது; இதற்கு என்ன தீர்வு?
-சுகுமார், சுண்டப்பாளையம்.
நாகை மாவட்டத்தில் இது இயல்பானது. எனவே, ஊறும் நிலத்தடி நீரை கட்டுப்படுத்த கட்டுமான மனையின் ஒரு மூலையில், 20 அடி ஆழம் வரை, 3'0' விட்டமுடைய ஓர் உறை கிணற்றை இறக்கி அதிலிருந்து தொடர்ந்து நீரை இறைத்து, அடித்தளத்தை எளிதாக கட்டிவிடலாம்.
நான் கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியில் வீடு கட்டிவருகிறேன். வீட்டின் நிலப்பரப்பின் கீழ் செப்டிக் தொட்டி பொருத்தப்பட்டு விட்டது. தற்போது, நிலத்தடி நீர் தொட்டி, மழைநீர் சேகரிப்பு தொட்டி பொருத்த வேண்டும். இதனால், அஸ்திவாரத்திற்கு ஆபத்து ஏற்படுமா?
-கிருத்திக், சிங்காநல்லுார்.
உங்களுடைய வீடு, பாரம் தாங்கும் அமைப்பு (லோடு பேரிங்) அல்லது கான்கிரீட் துாண்கள், விட்டங்கள் கொண்ட அமைப்பா என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆர்.சி., பிரேம்டு ஸ்டிரக்சுர் ஆக இருந்தால் பயமின்றி, நிலத்தடி நீர் தொட்டியை செப்டிக் தொட்டியில் இருந்து குறைந்தது, 10 அடி துாரத்தில் ஆழமாக அமைத்தால் போதுமானது. ஆனால், இதனுடைய வெளிப்புற சுவர்களை சிமென்ட் கலவை, 1:4 மற்றும் நீர் தடுப்பு திரவம் கலந்து பூச வேண்டும். இதனால், அடித்தளத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
நாங்கள் வீடு கட்ட திட்டமிட்டுள்ளோம். இதற்கு எந்த வகையான சிமென்ட்டை தேர்வு செய்வது? கான்கிரீட் தயாரிப்பு ஒரு வகை சிமென்ட் பூச வேண்டும் என்கிறார்கள். அது உண்மையா? கான்கிரீட் தயாரிப்புக்கும், பூச்சு வேலைக்கும் எந்த வகையான சிமென்ட் பயன்படுத்த வேண்டும்.
-அகிலா, போத்தனுார்.
இது முற்றிலும் தவறான தகவல். எனினும், உறுதியான, வலிமையான கட்டடத்திற்கு ஒரே சிமென்ட் ஏற்றதுதான். எல்லாவற்றுக்கும் எரிசாம்பல், 35 சதவீதம் வரை கலந்த சிமென்ட் வகைகளை பயன்படுத்தலாம். அடித்தளம், துாண், விட்டங்கள் வேலைக்கு M25 தரம்(1:1:2), கட்டு வேலைக்கு பி.பி.சி., சிமென்ட் கலவை விகிதம் 1:5, பூச்சு வேலைக்கு பி.பி.சி., சிமென்ட் கலவை விகிதம், 1:6 கொண்டு கட்டுமானம் மேற்கொள்ளலாம்.
எக்காரணத்திற்காகவும், மேஸ்திரி வாயிலாக வேலையாள் ஒப்பந்தத்தில் வீடு கட்டவே கூடாது. அலைச்சலும், கூடுதல் செலவுமே இறுதியில் மிஞ்சும்.
தகுதியுடைய நல்ல நம்பிக்கையுடைய ஒரு கட்டுமான பொறியாளரிடம் கொடுத்து, பதிவு பெற்ற ஒப்பந்தத்துடன் வேலை செய்ய வேண்டும். கட்டடத்தின் உறுதிக்கும், வலிமைக்கும் ஒப்பந்ததாரரை பொறுப்பாக்கி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.
- மாரிமுத்துராஜ்,
உறுப்பினர்,
கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்கம் (கொசினா).