/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
படிக்கட்டு உயரம் எப்படி இருந்தால் நல்லது?
/
படிக்கட்டு உயரம் எப்படி இருந்தால் நல்லது?
ADDED : ஜூன் 29, 2024 07:29 AM

'அனுபவம் வாய்ந்த நபர்களை கொண்டு, விரிசல்களை சரி செய்து மேலும் விரிசல்கள் வராமல் தடுக்கலாம்' என்று, அறிவுரை வழங்குகிறார், கோவை மாவட்ட அனைத்து கட்டட பொறியாளர் சங்க (காட்சியா) துணை பொருளாளர் ரவி.
கட்டுமானம் தொடர்பான, வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பொறியாளர் ரவி.
* பாத்ரூம் மற்றும் கிச்சனில் வால் டைல்ஸ் ஒட்டும்போது, பேஸ்ட் கொண்டு ஒட்டலாமா? --கார்த்திக், சரவணம்பட்டி.
பேஸ்ட் மட்டும் போட்டு தான் ஒட்ட வேண்டும்; சிமென்ட் கலந்து ஒட்டக்கூடாது. சிமென்ட் கலந்து ஒட்டும்போது, பேஸ்ட்டின் தன்மை மாறி, டைல்ஸ் விழுந்து விடும்.
* பொதுவாக படிக்கட்டு உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?
-மோகன்குமார், பட்டணம்.
படிக்கட்டின் உயரம் 6 இன்ச்சுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அகலம் 10 இன்ச்சுக்கு குறையாமல் இருக்க வேண்டும். படிக்கட்டின் உயரம் 6 இன்ச்சுக்கு அதிகமாக இருந்தால் பெரியவர்கள் ஏற, இறங்க சிரமமாக இருக்கும்.
* பெட்ரூம் கதவு அகலம் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?
- செல்வராஜ், பேரூர்.
குறைந்தது 3 அடி அகலமும் 7 அடி உயரமும் இருக்க வேண்டும். அறையின் உள் அளவுக்கு ஏதுவாக, கதவின் அகலம் மற்றும் உயரத்தை அதிகப்படுத்தலாம்.
* G.F.R.G பில்டிங் என்றால் என்ன?
- சதீஷ், கருமத்தம்பட்டி.
'கிளாஸ் பைபர் ரெய்ன்போர்சுடு ஜிப்சம்' என்று பெயர். இவ்வகை பேனல்களை உபயோகித்து வீடுகளை எளிதிலும், விரைவாகவும் அமைக்கலாம் .நல்ல அனுபவமுள்ள பொறியாளரை அணுகி, டிசைன் செய்து உபயோகப்படுத்த வேண்டும். வேலை எளிதாக முடியும்.
* எங்களது வீட்டில் கான்கிரீட் அடித்தளத்தில், எலக்ட்ரிக்கல் பைப் இருக்கும் இடத்தில் விரிசல் வந்துள்ளது. எவ்வாறு சரி செய்வது?
-மணிபாரதி, குனியமுத்துார்.
இப்பொழுது மார்க்கெட்டில் விரிசலுக்கென்று, நல்ல தரமான கெமிக்கல்ஸ் வருகிறது. அதை உபயோகித்து சரி செய்யலாம். கம்பிகளுக்கு இடையே சரியான முறையில், கவர் பிளாக் பயன்படுத்தினால், இவற்றை தவிர்க்கலாம்.
* தண்ணீர் தொட்டியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய கெமிக்கல் பயன்படுத்தலாமா?-
-வேலுச்சாமி, துடியலுார்.
கண்டிப்பாக பயன்படுத்தலாம். ஆனால், அந்த கெமிக்கல்ஸ் புட் கிரேடில் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். அனுபவம் உள்ள ஆட்களை கொண்டு விரிசல்களை சரி செய்து மேலும் விரிசல்கள் வராமல் தடுக்கலாம்.