/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
மரம், யுபிவிசிக்கு போட்டியாக வந்துள்ள கான்கிரீட் ஜன்னல்கள்!
/
மரம், யுபிவிசிக்கு போட்டியாக வந்துள்ள கான்கிரீட் ஜன்னல்கள்!
மரம், யுபிவிசிக்கு போட்டியாக வந்துள்ள கான்கிரீட் ஜன்னல்கள்!
மரம், யுபிவிசிக்கு போட்டியாக வந்துள்ள கான்கிரீட் ஜன்னல்கள்!
ADDED : மே 10, 2025 07:42 AM

புதிதாக வீடு கட்டும் போது அதில் கதவு, ஜன்னல்கள் அமைப்பதில், அளவு, அழகான வடிவமைப்பு சார்ந்த விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். முந்தைய காலத்தில் வீட்டுக்கு கதவு ஜன்னல்கள் அமைக்க வேண்டும் என்றால் அதற்கான நிலைகள் பெரும்பாலும் மரத்தால் தான் தயாரிக்கப்படும்.
சுவர் எழுப்பும் போது, கதவு. ஜன்னல்கள் அமையும் இடங்கள் காலியாக விடப்படும். சுவர்களுக்கான கட்டு வேலை முடிந்த நிலையில், அதில் விடப்பட்ட இடைவெளியில் கதவுக்கான நிலை மற்றும் ஜன்னலுக்கான நிலை அமைப்புகள் பொருத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
இதில் பெரும்பாலும் மரங்களை உரிய அளவுகளில் வெட்டி, ஒன்றுடன் ஒன்று இணைத்து ஜன்னல்களுக்கான நிலைகள் தயாரிக்கப்படும். இந்த நிலைகளை சுவருடன் இணைக்கும் இடங்களில் சில கம்பிகள் பொருத்துவது வழக்கமான பணியாக உள்ளது.
இதில், ஜன்னலுக்கான நிலைகளை பொருத்தும் இடத்தில் ஏற்படும் கூடுதல் சுமை, சுவரில் அழுத்தம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த அழுத்தம் காரணமாக, சுவரில் உள்ளிருந்து அல்லது பூச்சு வேலை முடிந்த மேற்பரப்பில் விரிசல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பிரிகாஸ்ட் முறையில் கான்கிரீட் கலவை பயன்படுத்தி ஜன்னல் பிரேம்கள் தயாரிக்கப்படுகின்றன. உங்கள் வீட்டில் எந்த வகை ஜன்னலாக இருந்தாலும் அதன் அளவு மற்றும் வடிவமைப்பு விபரங்களை அளித்தால் போதும், கான்கிரீட் ஜன்னல் பிரேம்கள் தயார் நிலையில் வந்துவிடும். சுவர் கட்டும் போதே இதை சரியான இடத்தில் வைத்து கட்டு வேலையை முடித்துவிடலாம். சுவருடன் எளிதாக இணைந்துவிடும் என்பதால், இதில் சுமை மற்றும் அழுத்தம் காரணமாக விரிசல்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு ரெடிமேட் முறையில் தயாரிக்கப்படும் போது அதில் கிரில் கம்பிகளை வைப்பதற்கும், கதவுகளை பொருத்துவதற்குமான வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர். இதில் மரத்தால் தயாரிக்கப்பட்ட கதவு அல்லது யுபிவிசி கதவுகள் என எதை வேண்டுமானாலும் உங்கள் வசதிக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம்.
குளியலறை, சமையலறையில் தேவைப்படும் சிறிய அளவிலான ஜன்னல்களுக்கான பிரேம்களையும் பிரிகாஸ்ட் முறையில் தயாரிக்கலாம். கான்கிரீட் கட்டுமானம் என்பதால், வழக்கமான மரம் சந்திக்கும் பாதிப்புகள் இதில் ஏற்படாது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.