
துருத்தி தெரியும் பவுடர் பூச்சு, நெற்றி யில் விபூதி பட்டை, குளிர் கண்ணாடி சகிதமாய், கடந்த 8 ஆண்டுகளாக தென்காசி மாவட்டம் சுரண்டையில் ஆட்டோ ஓட்டி வருகிறார் 44 வயது மாடசாமி.
தீவிரமான ரசிகராக நடை உடை பாவனைகளில் ரஜினி போலவே தெரிய முயற்சிக்கும் மாடசாமி, தன்னை திரும்பிப் பார்ப்பவர்களை எல்லாம் தன் ரசிகர்களாக கருதுகிறார்.
அம்மா - பத்ரகாளி
ரஜினி மாதிரிதெரியணும்னு முயற்சிக்கிற அவனை கண்டிக்கணும்னு எனக்குத் தோணலை. குடும்ப கஷ்டத்தால, ஒன்பது வயசுலேயே வேலைக்குப் போயிட்டான். தம்பி தங்கச்சி வாழ்க்கைக்காக தன் வாழ்க்கையை மறந்து உழைச்சான். அவன் சம்பாத்தியத்துல ஒருநாள் ஆட்டோ வாங்கிட்டு வந்து, 'இனி 'பாட்ஷா' மாதிரி வாழப் போறேன்மா'ன்னு சொன்னப்போ, 'இனியாவது அவன் வாழ்க்கையை அவன் வாழட்டும்'னு தோணுச்சு; 'சரி'ன்னு தலையாட்டிட்டேன்!
ஊர் நல்லவிதமா பேசுதா என்ன?
'ரஜினி ரசிகர்'னு சொல்லி ரஜினி போஸ்டருக்கு பால் அபிேஷகம் பண்றவன் இல்லை என் புள்ள; தண்டமா எந்த செலவும் பண்ண மாட்டான். பசிச்சா கூட வெளியே சாப்பிட மாட்டான். ஆனா, ரஜினி பேரைச் சொல்லி மக்களுக்கு உதவி பண்ணுவான். உடல்நலம் சரியில்லாத பயணிகளுக்கு ரொம்பவே உதவியா இருப்பான். அவன் ஆட்டோவுல பயணம் பண்ற பெண் பயணிகள் அவன் ரொம்ப கண்ணியமா நடந்துக்கிறதா சொல்வாங்க. அதை கேட்குறப்போ நிறைவா இருக்கும்!
மனைவி - இசக்கியம்மாள்
ரஜினியோட 'டூப்' மாதிரி என் கணவர் சுத்துறதால, பொது இடங்களுக்கு போனா எல்லார் பார்வையும் எங்க மேல விழுறதை தவிர்க்க முடியாது. 'இதுல, உங்களுக்கு பெருமையா'ன்னு கேட்டா, 'ஆமா'ன்னு சொல்ல மாட்டேன். ஆனா, நிச்சயம் எனக்கு வருத்தம் கிடையாது. ஏன்னா, ஒரு குடும்பத்தலைவனா அவர் எங்களுக்கு எந்த குறையும் வைச்சதில்லை. குடும்பத்தை கவுரவமா பார்த்துக்குற ஒவ்வொரு ஆணுமே 'சூப்பர் ஸ்டார்'தானே!
'அம்மா என்றழைக்காத உயிரில்லையே...' மாதிரி உணர்வுப்பூர்வ மான நிகழ்வுகள் ஏதாவது?
கால் வலிக்குதுன்னு சொன்னதுக்காக, அந்த பாட்டுல வர்ற மாதிரியே என் புள்ள என்னை துாக்கிட்டு நடந்திருக்கான். திருமணமாகி மூன்று குழந்தைகள் ஆனதுக்கு அப்புறமும், இன்னும் என் கையால சாப்பிடுறதுலதான் அவனுக்கு திருப்தி. ஆட்டோவுல உட்கார நான் சிரமப்படுறதை பார்த்துட்டு இந்த ஜனவரி மாசம் கார் வாங்கிட்டான் தெரியுமா!
எல்லாம் சரி... இன்னொருத்தர் அடையாளம் உங்களுக்கு எதுக்கு மாடசாமி?
எனக்கு மக்களோட நெருங்கிப் பழகணும்னு ஆசை. இந்த வேஷத்தால மக்கள் என்கிட்டே நெருங்கி வர்றாங்க; நிறைய பேசுறாங்க. இந்த வாழ்க்கை எனக்கு பிடிச்சிருக்கு.