
மாரியம்மாள், மதுரை: மாத்திரைகள் பயன்படுத்தாமல் மலச்சிக்கலை தீர்க்க வழியுள்ளதா?
நமது உணவுமுறைகளின் மூலம் மலச்சிக்கல் வராமல் தவிர்க்கலாம். நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழுத்தானிய உணவுகள் மலச்சிக்கலை தவிர்க்க உதவும். வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரைக்காய், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்பு வகைகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, வாழைப்பழம், மாம்பழங்களில் நார்ச்சத்து அதிகம். உங்கள் உணவுத்தட்டில் அடிக்கடி அவசியம் இடம்பெற வேண்டிய இந்த உணவுகளை தவிர்க்கக்கூடாது.
மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மிளகு ரசம், கொத்துமல்லி சட்னியை உணவில் அடிக்கடி சேர்க்கலாம்.
தினமும் 3 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பால், பால் தொடர்பான உணவுகளையும் காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதையும் குறைத்து கொள்வது நல்லது. நீண்ட நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காரக்கூடாது.
தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை தொடரலாம். புகைப்பிடித்தல், மது அருந்துதலை தவிர்க்க வேண்டும்.
மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். இதைத்தாண்டி மலச்சிக்கல் நீடித்தால் குடல் பரிசோதனையின் மூலம் காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
- டாக்டர் கு. கணேசன், பொதுமருத்துவ நிபுணர், ராஜபாளையம்
கவிதா, பண்ணைக்காடு: ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்த நிலையில் இடுப்பு வலி அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன?
பொதுவாக பெண்களுக்கு பிரசவம் இயல்பாக நடக்காத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க தண்டுவடத்தில் மயக்க ஊசி செலுத்துவது வழக்கம். இருந்த போதும் இதனால் இடுப்பு வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. இதை தவிர்க்க பிரவசத்திற்கு பின் பெண்கள் கால்சியம் , இரும்பு சத்து மாத்திரைகளை இரு ஆண்டுகள் இடைவிடாமல் உட்கொள்ள வேண்டும்.முதுகுத்தண்டு தசையை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை டாக்டர் அறிவுரையின் படி மேற்கொள்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.
- டாக்டர் பொன்ரதி, தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, கொடைக்கானல்
எஸ்.மாரிமுத்து, பெரியகுளம்: எனது அண்ணன் மகள் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றார். எதிர்பார்த்த மதிப்பெண்ணிற்கு சற்று குறைந்துள்ளார். இதனால் எனது அண்ணனும், அண்ணியும் மகளை தினமும் திட்டுகின்றனர். இதனால் சுறுசுறுப்பாக செயல்படுபவர் 'டல்லாக' உள்ளார். அண்ணன் குடும்பமே சோகத்தில் உள்ளனர். 10 நாட்களாக இதே பிரச்னை நீடிக்கிறது. இதனால் அண்ணன் டூ வீலரில் விழுந்து காயப்பட்டும், அண்ணி அனைவரிடமும் கோபமாக பேசுகிறார். இருவரும் கடுமையான மன உளைச்சலில் உள்ளனர். இயல்புநிலை திரும்ப என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை பிளஸ் 1 வகுப்பில் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்க்கும் பெற்றோர் குறைவு. பிள்ளைகளின் மனநிலையில் அவர்கள் பாடப்பிரிவை எடுக்க விடுங்கள். அவர்கள் சாதிப்பார்கள். அதை விடுத்து பெற்றோர் சிம்பிளாக கருத்து கூறுங்கள். இது தான் என அடம்பிடித்து உங்களது சொந்த கருத்தை திணிக்காதீர்கள்.
பிளஸ் 1 தேர்வுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க அவரை ஊக்குவியுங்கள். தற்போது உங்கள் அண்ணன் குடும்பத்தினருக்கு 'சைக்கோ தெரபி' கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். 3 மாதத்திற்கு 4 முதல் 6 முறை வந்தால் போதும். அவர்களுக்கு மன அழுத்தம் காணமல் போய்விடும். ரகசியம் காக்கப்படும்.
- டாக்டர் டி.மகாலட்சுமி, மனநல மருத்துவர், மாவட்ட அரசு மருத்துவமனை, பெரியகுளம்
என்.சக்திவேல், ராமநாதபுரம்: தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறேன். இதற்கான தீர்வு என்ன?
காய்ச்சல், தலைவலி, மூக்கு வடிதல், சளி, தும்மல், உடல் வலி போன்றவை காணப்பட்டால் உடனடியாக கை வைத்தியம் செய்யக்கூடாது. மருந்து கடைகளில் டாக்டர்கள் ஆலோசனை பெறாமல் மாத்திரை வாங்கி சாப்பிடக் கூடாது. அருகில் உள்ள அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவுக்கு சென்று காய்ச்சலுக்கு நில வேம்பு கஷாயம், பிரம்மானந்த பைரவா மாத்திரை, தாளிச்சாதி சூரணம் போன்றவைகளை டாக்டர்கள் பரிசோதனைக்குப்பின் பெற்று பயன் படுத்தலாம்.
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். என்ன வகை காய்ச்சல் என்பதை தெரிந்து அதற்கேற்ற சிகிச்சை பெற வேண்டும். கோடை மழைக்காலம் என்பதால் டெங்கு, டைபாய்டு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் இதில் எது, என கண்டறிந்து அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி நில வேம்பு கஷாயம் எடுத்துக்கொள்ளலாம்.
- டாக்டர் ஜி.புகழேந்தி, சித்த மருத்துவர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்.
முத்துக்குமார், விருதுநகர்: என் குழந்தைக்கு ஏழு வயதாகிறது. எதிலுமே கவனமில்லை. ஆனால் ஸ்மார்ட் போனை கையில் கொடுத்தால் மணிக்கணக்கில் ரீல்ஸ் பார்க்கிறான். கேம்ஸ் விளையாடுகிறான். இதில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும்?
இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு சலிப்பு தட்ட எந்த காரணமுமில்லை. காலை எழுந்ததுமுதல் துாங்கும் வரை ஒரு தொடர்ச்சியான ஸ்மார்ட் போன் பயன்பாடு உள்ளது. இதனால் 'டொபமைன்' எனும் மகிழ்ச்சிக்கான வேதிப்பொருள் அதிகம்வெளியாவதால் அவர்கள் சலிப்பை பழகுவதில்லை. இதனால் ஒரு முறை ஸ்மார்ட் போன் பயன்படுத்தி விட்டு சிறிது சலிப்பு வந்ததுமே மீண்டும் பயன்படுத்துகின்றனர்.
இதைக் கட்டுப்படுத்த பெற்றோர் நிறைய பொம்மைகள் தந்து, கற்றல் வகுப்புகளில் சேர்க்கின்றனர். இவையெல்லாம் ஒரு வகை திணிப்பு தான். இதை விட குழந்தைகளுக்கு 'டிலேய்ட் கிரட்டிபிகேஷன்' கற்று தருவது நல்லது. அதாவது ஒரு விஷயம் நடக்க அதற்கான உழைப்பை தர வேண்டும், காத்திருக்க வேண்டும் என்பது தான். கஷ்டப்பட்டு ஒரு விஷயத்தை செய்து வெற்றி கண்டால் தான் 'டொபமைன்'எனும் மகிழ்ச்சி வேதிப்பொருள் வெளியாகும்.
அதற்கு குழந்தைகளின் சூழல் எளிமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காய்கறி வாங்க செல்லும் போது கடைகளுக்கு கூட்டி செல்வது, சிறுசேமிப்பு செய்வது, வீட்டை சுத்தம் செய்வதில் அவர்களையும் ஈடுபட செய்வது போன்றவை அவசியம்.
நாமும் அலைபேசியை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். சமைக்கும் போது குழந்தைகளை உடன் வைத்திருப்பது என கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும்.
நாம் வாயில் கூறுவதை குழந்தைகள் ஏற்றுக் கொள்வதில்லை. நாம் செய்வதை தான் செய்வர்.
- ஆர்.ஸ்வர்ண கீர்த்திகா, க்ளினிக்கல் சைக்காலஜிஸ்ட், ராஜபாளையம்