PUBLISHED ON : ஜன 28, 2024

ஆண்டுதோறும் மக்கள் தொகை 2.5 கோடி நம் நாட்டில் அதிகரிக்கிறது. இன்று, நடுத்தர, அதற்கும் கீழ் உள்ள மக்களிடையே உடல் பருமன் அதிகரித்து உள்ளது. எனவே, பணக்காரர்களின் நோயாக இருந்த சர்க்கரை கோளாறு, இன்று எல்லா தரப்பு மக்களுக்கும் உள்ளது. பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்களிடையே ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து இருப்பதால், சர்க்கரை கோளாறு வெகுவாக குறைந்துவிட்டது. பதிலாக, நடுத்தர, அதற்கும் கீழ், இளம் வயதினரிடம் குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் உள்ளது.
காற்று மாசு ஒரு காரணம். கடந்த காலங்களில் போகி அன்று தான் காற்று மாசு இருக்கும். இன்று ஆண்டு முழுவதும் உள்ளது. காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள், சுவாசத்தின் வாயிலாக சென்று, நுரையீரலை மட்டுமல்ல, ரத்தத்தில் கலந்து கணையத்தை சிதைத்து, அதன் செயல்பாட்டை குறைக்கிறது.
கொரோனா பாதிப்பின் போது, ஸ்டிராய்டு மருந்துகளின் பயன்பாடு, கொரோனா வைரஸ் நேரடியாக கணையத்தில் உள்ள பீட்டா செல்களை சிதைத்து, சர்க்கரை கோளாறை உண்டு பண்ணியது.
பாலிஷ் செய்த அரிசி, மைதா, வெள்ளை சர்க்கரை, பால் என்று வெண்மை நிறத்தை தவிர்த்து, நாம் சாப்பிடும் தட்டு, வண்ணங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். பச்சை, சிவப்பு, மஞ்சள், ஊதா, சாம்பல் என்று காய்கறிகள், பழங்கள், தானியங்களில் உள்ள ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு விட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. படிப்பு, தேர்வு, வேலை என்று எதிலும் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.
பலரும் என்னிடம் கேட்பது 'ரிவர்ஸ் டயாபடிக்' சாத்தியமா? என்று தான்.
சமூக வலைதளங்களில் இது மிகைப்படுத்தப்படுகிறது. சர்க்கரை கோளாறை இயல்பு நிலைக்கு அதாவது, ரிவர்ஸ் செய்ய வேண்டும் என்றால், அதற்கு 'ஏ, பி, சி, டி, இ' என்ற ஐந்து விஷயங்கள் இருக்க வேண்டும்.
ஏ - ஹெச்பிஏ1சி
மூன்று மாத ரத்த சர்க்கரையின் சராசரி அளவு, 5 - 6 சதவீதம். சர்க்கரை கோளாறில் அதிகபட்சம் 9 சதவீதம் வரை இருந்தால் ரிவர்ஸ் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு மேல் இருந்தால் ரிவர்ஸ் செய்வது சிரமம்.
பி - உடல் எடை
அதிக உடல் எடையை குறைக்கலாம். இதனால் ரிவஸ் செய்வதற்கு வாய்ப்பு அதிகம். உடல் எடை குறைவாக இருப்பவரால் என்ன செய்ய முடியும்?
சி - சி பெப்டைன் பரிசோதனை
இன்சுலின் அளவு உடலில் எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியும் பரிசோதனை. இயல்பான அளவான 100 சதவீதத்தில் 30 சதவீதம் குறைவாக இருந்தால் மட்டுமே சாத்தியம். வெறும் 40 சதவீதம் இருந்தால் ரிவர்ஸ் பண்ண முடியாது.
டி - எத்தனை ஆண்டுகள்
ஐந்து ஆண்டுகளாக சர்க்கரை கோளாறு இருந்தால் பரவாயில்லை. 15 ஆண்டுகளாக இருந்தால் கணைய செல்கள் செயலிழந்து விடும். அந்த நேரத்தில் ரிவர்சலுக்கு முயற்சி செய்ய முடியாது.
இ - உற்சாகம்
சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் பயிற்சி செய்வது. காரணம், இது போன்ற முயற்சியில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று கார்போஹைட்ரேட் உணவுகளை நிறுத்தி, காய்கறிகள், சில நேரங்களில் 200 கலோரி சத்து பானம் மட்டும் மதிய, இரவு உணவுக்கு தருகின்றனர். உணவு கட்டுப்பாடு ரத்த சர்க்கரையை ரிவர்சல் செய்யும்; சிறிது சறுக்கினாலும் திரும்ப வந்து விடும்.
இந்நிலையில் உள்ள 10 சதவீதம் பேர் முயற்சித்து, 5 சதவீதம் பேருக்கே சாத்தியமாகிறது. இவர்கள் தான் சமூக ஊடகங்களில், அனைவராலும் முடியும் என்றும், மருந்து கொடுத்து டாக்டர்கள் மருந்து தந்து தவறு செய்வது போலவும் விளம்பரம் செய்கின்றனர். அறிவியல்பூர்வமாக சர்க்கரை கோளாறு என்றால் என்னவென்றே இவர்களுக்கு தெரியாது.
டாக்டர் வி.மோகன்,
சர்க்கரை கோளாறு சிறப்பு மருத்துவர்,
சென்னை
போன்: 89391 10000